இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளையராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 நவம்பர், 2011

இசைஞானி மனைவியார் ஜீவா அம்மையாருக்கு அஞ்சலி!!!

தமிழகத்தின் கடைக்கோடியில் பண்ணைபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, இசையின் சகல உயரங்களையும், சிகரங்களையும் தொட்டு, அரிய இசை நுட்பங்களையும் கைவரப்பெற்ற இசைஞானிக்கும் அவரது மக்கட்கும் திருமதி.ஜீவா அம்மாவின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.இசைஞானியின் மகத்தான சாதனைகளுக்கு பின்னால் ஜீவா அம்மையாரின் கட்டுக்கோப்பான வீட்டு நிர்வாகம், ஒத்துழைப்பு, புரிந்துணர்வும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதை இசைஞானியின் கடைக்கோடி ரசிகனான என்னால் கண்கூடாக உணரமுடிகிறது, இனி ஆற்றிடவும் தேற்றிடவும் யாரால் முடியும்?!!!,மனைவியின் இழப்பால் வாடும் அந்த இசைக்கு எல்லாம் வல்ல மகேசன் சர்வ வல்லமையையும் தந்தருள வேண்டும்,அவர் விரைவாக இதை கடந்து வரவேண்டும். என நெஞ்சுருக வேண்டுகிறேன்.அந்த இசை குடும்பத்தின் சோகத்தில் நாமும் பங்கேற்போம் .
===000===

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இசைஞானி பற்றி விகடன் நினைவுநாடாக்களில் வாலி மனம்திறந்தவை!!!

நினைவு நாடாக்கள் ஒரு rewind
வாலி
ஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்
தலைப்புச் செய்தி!

'ஸ்வாமிநாத - பரிபாலயமாம்!’- சவுக்க காலத்தில் பாடப்பெறும் சாஹித்யம் இது; மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றியது.நாட்டை ராகம்; நல்ல பாட்டு. கேட்கும்போதே, நம் அகக் கண் முன் ஆறிரு கரத்தனாய் ஸ்வாமிமலை ஸ்வாமிநாதன் பிரத்தியட்சமாய் நிற்பான், பிரசன்ன வதனத்தோடு!

இந்தப் பாட்டைப் பாடித்தான் - இசைஞானி இளையராஜா அவர்கள், என்கூட வரும் ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிப்பார்!ஸ்வாமிநாதன் இல்லாமல் ஸ்டூடியோவிற்கு நான் சென்றது கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளாக, என்னுடைய இயக்கம் அவனைச் சார்ந்துதான்; நீண்ட இரவிலும் என்னை நீங்கா நிழலவன்!
உறவு முறையில் மைத்துனன்; உத்தியோக முறையில் என் முதல் நிலை உதவியாளன்.

ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவைத்து, ஒரு வருடம் கழித்து வாங்கிக்கொள்ளலாம்; அதே நோட்டுகள் அப்படியே இருக்கும். அவ்வளவு கை சுத்தம் DETTOL  போட்டுக் கழுவினாற்போல்!என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு.'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு!என்னுடைய கல்யாண குணங்களை எண்ணுமிடத்து, எனக்கே என் மேல் கோபம் வரும்; என் செய்ய? என் வார்ப்படம் அப்படி!'இன்னது செய்யலாம்; இன்னது செய்யக் கூடாது’ - என்றெல்லாம் ஸ்வாமிநாதன், ஒரு BIG BROTHER ஸ்தானத்திலிருந்து எடுத்துக் கூறுவான்.அவன் சொல்லைப் புறம் தள்ளுவேன்; அடுத்த அரை மணி நேரம் கழித்து; அவன் சொன்னதுதான் அறம் எனக்கொள்ளுவேன்.

ஆனால் - அந்த அரை மணி நேரத்திற்குள் அவனுக்கு நான் நடத்தும், அஷ்டோத்தர அர்ச்சனை இருக்கிறதே -அதை, மானமுள்ள எவனும் கேட்டுக் கொண்டு ஒரு நொடி என் வயின் நிற்க மாட்டான்; ஸ்வாமிநாதன் நிற்பான்! ஏன் தெரியுமா? அவனுக்குத் தன்மானம்விட, என் மானம் பெரிது!ஒரு சீனக் கதை நினைவிற்கு வருகிறது.அடிக்கடி கோபம்கொண்டு - தன் மகனை ஒரு தந்தை அடிப்பதுண்டு. தந்தை பால் உள்ள அளப்பரும் அன்பால், வலியைப் பொறுத்துக்கொண்டு மகன் வாளா விருப்பான்.ஒருநாள், தந்தை வெகுண்டு மகனின் தாடையில் அறைகையில் -மகன் 'ஓ’ வென்று அழுதான்; தந்தை வியப்பு மேலிட்டு -'மகனே! நான் எவ்வளவு அடித்தாலும் அழாதவன் நீ; இன்று அழுகிறாயே? மிகவும் வலித்துவிட்டதா?’ என்று வினவினான்.அதற்கு மகன், தந்தையின் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டு -'அப்பா! முன்புபோல் வலிக்கவில்லையே என்றுதான் நான் அழுதேன்; உங்கள் பலம் குறைந்து, நீங்கள் பலவீனமாகிவிட்டீர்களே அப்பா!’ என்று விக்கி விக்கித் தொடர்ந்து அழலானான்.
அந்த மகன்போல், ஸ்வாமிநாதன்; நான் சினந்து சீறுகையில், எங்கே எனக்கு BLOOD PRESSURE ஏறிவிடுமோ என்று வலியை, வசவுகளைப் பொறுத்து நிற்பான்!'அகலகில்லேன் இறையளவும்’ என்று திருவேங்கடத்தானைத் தழுவி நிற்கும் அலர் மேல் மங்கைத் தாயார் போன்றவன் அவன்!முதல்வரோடு மேடையில் அமர்ந்துஇருப்பேன்; என் பின் ஸ்வாமிநாதன் நிற்பான். காவல் துறை அதிகாரிகள் அறிவார்கள் -கலைஞருக்கு ஷண்முகநாதன்போல்; இந்த கவிஞருக்கு ஸ்வாமிநாதன் என்று!ஸ்டூடியோவில் ஸ்வாமிநாதனைக் கண்டால், 'வாலி சார் வந்திருக்கிறாரா?’ என்று வினவுவர் - கமல், ரஜினி முதலானோர்.

அருளாளர் திரு.ஆரெம்வீ சொல்லுவார்; 'ஸ்வாமிநாதன் மாதிரி ஒரு ஆள் வாய்க்கிறது ரொம்ப அபூர்வம்!’ என்று.எவரோடும் எளிதாகப் பேசும் இயல்பு உடையவரல்ல திரு.இளையராஜா. எவ்வளவு பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணமாயினும், அவரது வருகையை ஆராலும் உறுதி செய்ய முடியாது.அப்படிப்பட்டவர் -பழைய மாம்பலத்தில் நடந்த ஸ்வாமிநாதன் திருமணத்திற்கு, எனக்கு முன்னதாகச் சென்று பரிசுப் பொருள் வழங்கி ஆசீர்வதித்தார் எனில் -ஸ்வாமிநாதனின் சற்குணங்களே, அதற்குக் காரணம்; அவனுக்கு வாய்த்த மனைவி திருமதி சீதாவும் ஓர் அருங்குணவதியே!ஸ்வாமிநாதனுக்கு ஒரு கண் இல்லை; ஸ்வாமிநாதன் இல்லையெனில், எனக்கும் ஒரு கண் இல்லையென்றாகும்!
'ஸ்வாமிநாத பரிபாலயமாம்’ பாடி - ஸ்வாமிநாதனைக் குசலம் விசாரிக்கும் -
இசைஞானி இளையராஜாவைப்பற்றி இந்த இடத்தில் என் சிந்தனை சிறகடித்து அவரோடு பழக நேர்ந்த ஆரம்ப நாள் களை நோக்கிச் செல்கிறது.'பிரியா விடை’ என்றொரு படம். முத்துராமன்-பிரமீளா நடித்தது. பிரசாத் ஸ்டூடியோ தயாரித்தது.
அமரர் திரு.G.K.வெங்கடேஷ் அவர் கள்தான் இசை. அங்கு பாட்டெழுதப் போகையில்தான் இளையராஜாவை ஒரு GUITAR PLAYER ஆக COMPOSING - ல் சந்திக்கிறேன்.பாட்டுக்கான பல்லவியே -
'ராஜா! பாருங்க! ராஜாவைப் பாருங்க!’ என்று எழுதுகிறேன்.பின்னாளில், தன் இசையால் திசைகளை அளக்கப்போகும் ஒரு நபரை, முன் கூட்டியே முகமன் கூறி நான் வரவேற்பதுபோல் வாய்த்திருந்தது அந்தப் பல்லவி.அதுதான் நிமித்தம் என்பது!பின் இளையராஜா வளர்ச்சியும் வாழ்வும் வையம் அறிந்ததே. நான் இப்போது எழுதப் புகுவது யாதெனில் -இளையராஜாவின் வரலாறு இவ்வுலகிற்கு விடுக்கின்ற செய்தி என்ன என்பதுதான்!ஓர் உயிர் - விண்ணினின்றும் ஒரு பெண்ணில் இறங்குகின்றது; பின், பெண் ணினின்றும் மண்ணில் இறங்குகின்றது. இறுதியில், மண்ணினின்றும் அது விண்ணில் ஏறுகின்றது.இந்தச் சுழற்சியில் -'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - எனும் பெரு வழக்குதான், பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் கலவாத பரிசுத்தமான உண்மை.'வர்ணாஸ்ரம தர்ம’மும்; 'மனுதர்ம’மும் - வந்தவன் போனவன் வகுத்தவையேஅல்லாது, வல்லான் வகுத்தவையல்ல.இன்னணம் இருக்கையில் -எவர் எழுச்சியை எவர் தடுக்க ஏலும்? காற்றுடைய கைப் பந்தை, ஆழ நீரில் நெடு நேரம் அமுக்கிவைக்க ஆரால் ஆகும்?முட்களுக்கிடையே முகை விரிக்கும் ரோஜா மலர்போல் -முடை நாற்றமெடுத்த மூடத்தனங்களைத் தகர்த்துத் தலையெடுத்துத் தகத்தகாயமாய்த் துலங்க -ஓர் உயிர் முனையுமாயின், அதன் வெற்றியை அது வடிக்கும் வியர்வைதான் தீர்மானிக்கிறது! 

ளையராஜாவை, முப்பத்தைந்தாண்டுகளாக, அருகிருந்து அணு அணுவாகப் பார்த்தவன் நான்.நான் - சினிமாவில் புகுங்காலை, எப்படி பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் களத்தில் இருந்தார்களோ -அப்படி இளையராஜா இசையமைக்கப் புகுங்காலை - விஸ்வநாதன் அவர்களும்; கே.வி.மகாதேவன் அவர்களும் - கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.ஓர் 'அன்னக்கிளி’யால் மட்டும்,ஆகாயத்தை அளாவி நிற்க முடியுமா என்ன?இளையராஜா - இரவும் பகலும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு இசை யின் சகல பரிமாணங்களையும் உள்வாங்கி நிற்கலானார்!அதிகாலை சேவற் கோழி கூவுமுன் விழித்தார்; சாமக்கோழி கூவியபின் துயின்றார்.இடைப்பட்ட நேரங்களில் -சம்ஸ்க்ருதம் கற்றார்; சாஸ்த்ரீய சங்கீதத் தைக் கற்றார்; 'பீத்தோவ’னையும் 'மொஸாட்’ டையும் தன் பியானோவின் மடியில் மீட்டும் பிறப்பெடுக்கச் செய்து -காலவெள்ளத்தால் -சற்றே துருப்பிடித்திருந்த அவர்களது தூய இசைக்குத் துலாம்பரமாகச் சாணை பிடித்துக் கூர் ஏற்றினார். 

தேம்ஸ் நதி தீரத்திலே -வெள்ளை உரோமங்கள் வியப்பில் புளகம் எய்த -பண்ணைப்புரத்தை பக்கிங் ஹேம் கை குலுக்கி கவுரவிக்க -SYMPHONY செய்தார்! 

ழுபத்திரண்டு மேளகர்த்தாக்களையும்; ஜன்யங்களையும் - கற்று, பலவற்றைப்    படப் பாடல்களில் -அவற்றின் ஆரோகண அவரோகண ஸ்வரங்கள் - அதனதன் ஸ்தானங்களில் சௌக்யமாய் எழுந்தருளியிருக்க -இடம் பெறவைத்து இசைபெற இசைத்து -சங்கீதப் பிதாமகர் செம்மங்குடியின் விரல்களை அவர் மூக்கின் மேல் அமர்த்திய - இளையராஜாவை முழுமையாய்ப் பாராட்ட, தமிழுக்கு நானெங்கு போவேன்?'வருஷம் 16’-ல், CLIMAX SONG; 'தோடி’ ராகத்தில் அதைத் தோய்த்தெடுத்த ராஜாவின் வித்தகம் - ராப்பகலாக உழைத்தாலும் பிறிதொருவருக்கு வசப்படுமா 'ரீதிகௌளை’; 'பிலஹரி’; 'தர்பாரி கானடா’; 'மலய மாருதம்’; 'நளினகாந்தி’; 'நாட்டக்குறிஞ்சி’ - சொல்லிக்கொண்டே போகலாம்! 'தமிழ்’ - என்று எடுத்துக்கொண்டால், எனக்கே வெண்பா இலக்கணம் கற்பித்தவர் இளையராஜாதான்! 

திருவரங்கம் கோபுரம் கட்டும் திருப்பணிக்கும்; தாய் மூகாம்பிகைக்கு வைர அபய ஹஸ்தம் அணிவிப்பதற்கும்; திருவண்ணாமலைக் கோயில் கோபுரப் பராமரிப்புக்கும்...பல லட்சங்களை மனமுவந்து தந்த வண்மைக் குணம், இசைஞானியல்லாது எவர்க்கு வரும்?அவர் -கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆன்மிகவாதியல்ல.தன்னுள் தன்னைத் தேடி அந்தத் 'தன்’னிலேயே தன்னைக் கரைத்துக்கொண்ட சித்தர் அவர்!

ஒரு நூற்றாண்டு காலம் அருள்பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா.ரமணாஸ்ரமத்தின் உள்ளேயே இளையராஜா தங்கித் தியானிக்க ஒரு குடில் இருக்கிறது.தீவிர சைவம்; அவரது வீட்டில், மாதத்தில் பல நாள்கள், வேதபாராயணம் நடக்கும். நவராத்திரி ஒன்பது நாள்களும், செந்தழல் வளர்த்தோம்பும் ஓமம் உள்பட -ஓர் அம்மன் சந்நிதிபோல் சங்கீத வித்வான்களின் 'சதஸ்’ நடக்கும்!இசைஞானி இளையராஜாவிற்கு இணையாக இன்னோர் அந்தணர் இலர் என்பேன்!

மூகத்தையும், சாதி அமைப்பையும் சாடி நிற்காமல் -அதை அறவே புறக்கணித்து, மெய் வருந்த முயற்சித்தால், எவரும் மேன்மையுறலாம் என்பதுதான் -இளையராஜாவின் வரலாறு இவ்வுலகுக்கு வழங்குகின்ற - தலையாய செய்தி! தலைப்புச் செய்தி!
- சுழலும்...

வியாழன், 2 ஜூன், 2011

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

 "எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"
இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!. ராஜா சார்.... மென் மேலும் உங்கள் இசைப்பணியும், இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல இறையருளை இந்நாளில் வேண்டுகிறேன். உங்களை ரசிகர்களாகிய நாங்கள்  இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது  நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன், அது யாராலும் நெருங்கமுடியாத ஒரு சாதனை !!!.

யாம் பெற்ற இன்பம்

யாம் பெற்ற இன்பம்

ரமண மாலை,குரு ரமண கீதம் ,திருவாசகம் கேட்போம். நல்ல மனிதம் வளர்ப்போம். தெய்வ சிந்தனை பெறுவோம் தீய எண்ணம்,பழக்கம் விடுவோம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் !!!யாரும் தவற விடக்கூடாத ஒன்று!!!

ருமை நண்பர்களே!!!
இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் என்னும் அபூர்வமான ஒரு நேர்காணலை இசையருவி சேனலில் இயக்குனர் மிஷ்கின் ஏற்பாடு செதிருந்தார்.மனதுக்குள்  ஆனந்தப் பேரலைகளை ,மிகவும் தோற்றுவித்த ஒரு நிகழ்ச்சி அது என்பேன். நான் நந்தலாலா படத்தை சென்னைக்கு விரைவில் வந்து பார்க்க இருக்கிறேன்.நிச்சயம் அதன் பாதிப்பை நடுக்கத்துடனாவது பதிவு செய்வேன்.  இந்த நிகழ்ச்சி பார்க்கையிலேயே, படத்தை எப்படியும் பார்த்துவிடவேண்டும்,  என்ற ஆவல் ஒருவருக்கு எழுவது திண்ணம்.

தே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில், இசைஞானி உருவாக்கித் தந்த ஐந்து பாடல்களில் மூன்றினை  படத்தில் உபயோகப்படுத்தாததற்கு இளையராஜாவிடமும், அவர் ரசிகர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டார் மிஷ்கின்,   அந்த பாங்கு மிகவும் அரிய ஒன்று.    இவ்வளவு தன்னடக்கத்துடன் மிஷ்கின் பேசி நான் பார்த்ததே இல்லை,எப்போதுமே அறைக்குள்ளேயே குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் மிஷ்கின்,நேர்காணல் ஆரம்பித்த மூன்றாவது நிமிடம், அதை கழற்றியேவிட்டார், அதன் பின்னர் அணியவேயில்லை. 

யக்குனர் மிஷ்கின் இசைஞானியை பாராட்டு மழையில் நனையவிட்டார் என்றால் மிகையில்லை.  யாரும் தவறவிடக்கூடாத நேர்காணல் இது, இது போல இசைஞானி நேர்காணல் கொடுப்பது மிக மிக அபூர்வம்.இதை தயாரித்த இசையருவிக்கும்,யூட்யூபில் வெளியிட்ட டெக்சதீஷ். நெட்டிற்கும் மிக்க நன்றிகள்.
நந்தலாலா படத்தின் மகத்தான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளை நண்பர் சுரேஷ் குமார் அவரது தளத்தில் தொகுத்திருக்கிறார். தரவிறக்க சுட்டிக்கு
======00000======
பாகம்-1


பாகம்-2

பாகம்-3

======00000======

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மீண்டும் இசைஞானியின் கிராமிய விருந்து!!! அழகர்சாமியின் குதிரை

வுதம் மேனன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இசைஞானியும் கவுதம் மேனனும் இணைவது இதுவே முதல் முறை.

பல முறை தன்னை இளையராஜாவின் ரசிகன் என்று கூறி வந்தார் கவுதம் மேனன். ஆனால் அவர் இதுவரை ஒரு படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியதில்லை. இந்த நிலையில் கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனமான ஃபோட்டான் ஃபேக்டரி 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தைத் தயாரிக்கிறது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் படம் இது. படத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகவே இசை பயணிப்பதால், இதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என கவுதம் மேனன் கேட்டுக் கொள்ள, இசைஞானியும் சம்மதித்துள்ளார். இதன்மூலம் இளையராஜா-கவுதம் மேனன்-சுசீந்திரன் என புதுக்கூட்டணி உருவாகியுள்ளது.

பாஸ்கர்சக்தி எழுதிய நாவலைத்தான் அழகர்சாமியின் குதிரை என படமாக எடுக்கிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகியாக நடித்த சரண்யா மோகன்தான் இதிலும் நாயகி. அந்தப் படத்தில் கபடி விளையாட்டி வீரராக நடித்த இளைஞரை முதல் முறையாக ஹீரோவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.
நல்ல செய்திக்கு நன்றி:-தட்ஸ்தமிழ்

சனி, 5 ஜூன், 2010

யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா=தட்ஸ் தமிழ் செய்தி

சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.

எஸ்.ராமகிருஷ்ணனை பாட்டெழுத வைத்த இசைஞானி!=தட்ஸ்தமிழ் செய்தி

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பாடலாசிரியராகிறார்... படித்துறை என்ற படத்தின் மூலம்.

முழுக்க முழுக்க திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் எடுக்கப்படும் படம் படித்துறை. பாலுமகேந்திராவின் சீடரான சுகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், இசைஞானி இளையராஜா இசை தர ஒப்புக் கொண்டாராம்.

படத்தில் பாடலாசிரியர்களாக இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார் ராஜா. அவர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணன். இருவருமே ஆரம்பத்தில் பாடல் எழுத சற்றுத் தயங்க, இளையராஜாதான் அவர்களை உற்சாகப்படுத்தி பாட்டெழுத வைத்துள்ளார்.

"என் படத்துக்கு இளையராஜாதான் இசை என்பதில் இன்று நேற்றல்ல... பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். நானும் இசையைப் படித்தவன். ராஜாவின் இசைக்கு என்னைக் கொடுத்தவன். படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுமே முத்திரை பதிக்கும்..." என்கிறார் இயக்குநர் சுகா.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர் நடிகர் ஆர்யா. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லையாம்!

பாரதிராஜா தலைமையில் இன்று 'நத்திங் பட் விண்ட்'-தட்ஸ் தமிழ் செய்தி

இயக்குநர் பாரதிராஜாவின் தலைமையில், இளையராஜா பங்கேற்கும் நத்திங் பட் விண்ட் இசைவிழா இன்று சனிக்கிழமை மாலை நடக்கிறது.

சென்னை சங்கீத நாடக சபையில் (மியூசிக் அகாடமி) மாலை 7 மணிக்குத் துவங்கும் இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை வகிக்கிறார். கவிஞர் வாலி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் 67 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரைக் கவுரவிக்க, அவரது மகள் பவதாரிணி நடத்தும் இசை நிகழ்ச்சி இது. மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகர்கள் பாடுகிறார்கள்.

இரவு 9 மணி வரை நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு நத்திங் பட் விண்ட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயரில் 25 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா உருவாக்கிய இசை ஆல்பம் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸியா இதில் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தார். சர்வதேச அளவில் மிகப் பிரபலமான இசை ஆல்பங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற சில இசைக் கோர்வைகளையும் விழாவில் தரப் போகிறார்களாம்.
=====000=====

செவ்வாய், 1 ஜூன், 2010

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

"எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"

இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ராஜா சார். மென் மேலும் உங்கள் இசைப்பணியும்,இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.
”எனக்கு மிகவும் பிடித்த நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல்”





நம்ம தல கானாபிரபா அமர்க்களமான பிறந்தநாள் மலரே போட்டிருக்கிறார்.அதை மிஸ் பண்ணாதீங்க.
==============
இசைஞானியின் பிறந்தநாள் செய்தி தட்ஸ் தமிழில் இருந்து அப்படியே

இசை எல்லாருக்கும் சொந்தமானது. யாரும் அதற்கு வாரிசாக முடியாது, என்றார் இசைஞானி இளையராஜா.

ஜூன் 2ம் தேதியான நேற்று தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் அவர் பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி, திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் குவிந்தனர்.

பிறந்த நாள் விழாவை ஃபெப்ஸி அமைப்பும், ஜி சிவாவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன், ஃபெப்ஸி ஜி சிவா, நடிகர்-ஒளிப்பதிவாளர் நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்று, இளையராஜாவை வாழ்த்தினர்.
பின்னர் மூன்று ஆசிரமங்களைச் சேர்ந்த 1000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார் இளையராஜா.

ஃபெப்ஸி சார்பில் கொண்டுவரப்பட்ட கேக்கை வெட்டியவர், ராம நாராயணன், விசி குகநாதன் உள்ளிட்டோருக்கு ஊட்டினார்.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா சார்பில் கேக் வரவழைக்கப்பட்டது. அதையும் வெட்டிய ராஜா, அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.

அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறையும் பிறந்த நாள் விழா வேண்டாம் என்றேன். ஆனால் இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்ற உங்களின் அன்புக்காக இந்த முறை கொண்டாடுகிறேன்.

என்னிடம் எந்த பிறந்த நாள் செய்தியும் கிடையாது. இந்த நாளில், ஏராளமான குழந்தைகளுக்கு உணவு வழங்கியது மிகுந்த நிறைவாக உள்ளது…” என்றார்.

பின்னர் அவரிடம், “உங்கள் இசை வாரிசு யார்?” என்று கேட்டனர்.

சற்றும் யோசிக்காத ராஜா, 'நீங்கள்தான்' என்றார். பின்னர், “இந்த உலகம் ரொம்பப் பெரிசு. இதில் அனைவருக்குமே சம பங்குண்டு. இங்கே உரிமை கொண்டாட என்ன இருக்கிறது. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை. இசைக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. அவரவர் திறமையில் முன்னே வர வேண்டியதுதான்” என்றார்.

பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பல பாடகர்கள், கவிஞர்கள் ராஜாவுக்கு வாழ்த்துக் கூறிச் சென்றவண்ணமிருந்தனர்.

ராஜா பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் டிவி:

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. ஆனால் விஜயகாந்தின் கேப்டன் டிவி மட்டும் காலை முதல் மாலை வரை இளையராஜா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் அருமையான பாடல்களையும் தொடர்ந்து ஒளிபரப்பியது.

மு.மேத்தா, கார்த்திக் ராஜா, பாடகர்கள் திப்பு ஹரிணி பேட்டிகள், ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவரது பேட்டி என தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.

புதன், 12 மே, 2010

ஹவ் டு நேம் இட் – 24 ஆண்டுகளுக்கு முந்தைய மாபெரும் இசைமுயற்சி


ilayarjfun-05
இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை வரியில் மதிப்பீடுகளை அள்ளித் தெளிக்கும் காலத்தில் இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாய் பெரும்பான்மையான விமர்சனங்கள் ட்விட்டர் பாணியிலேயே பதியப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட கட்டுரைகளும் தெளிவில்லாத சித்திரத்தை மட்டுமே நம்முன் வைக்கிறன. பல சங்கம (Fusion) இசைத் தொகுப்புகள், குறிப்பாகத் தமிழ் மையம் வெளியிட்ட Mozart meets India போன்ற தொகுப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த இத்தொகுப்புக்கு நடுநிலையான விமர்சனங்கள் உருவாகாத நிலை இன்றும் இருப்பது வேதனையானது. வெளியான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இருக்கும் சில முக்கியமான விமர்சனங்களையும், அவை முன்வைத்த கேள்விகளையும் மறுபரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
எல்லா நாட்டிலும் கலைஞர்கள் இயங்கும் துறைக்கு வெளியே அவர்களின் ஆளுமைகளை விமர்சிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைக்கு வெளியே நடக்கும் விவாதங்களுக்கு அதிகமாகத் தீனி போடுவதும் இவைதான். இப்படிப்பட்ட விமர்சனங்களை மீறியே ஒரு கலைஞன் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களும், அதன் வழியே எழும் விவாதங்களும் பெரும்பாலும் இந்த அளவிலேயே நின்றுவிடுகின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள், இளையராஜாவின் ஆளுமையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. இளையராஜாவின் இசைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. அவர் நிகழ்த்திய இசைச் சாதனைகளை ஒதுக்கிச் செல்லும் நிலை பரிதாபமானது. இணையத்தில், தனிப்பட்ட குழுக்கள் மட்டுமே இளையராஜாவின் இசை குறித்த விவாதங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் அவை எங்கும் பதியப்படாமல் காற்றில் கரைந்துவிடுகின்றன.
கிராமிய இசைப் பாணி, கர்நாடக சாஹித்தியங்கள், மேற்கத்திய செவ்வியல் முறைகள் மூன்றையும் சரியான கலவையில் இணைத்து இனிமையான பாடல்களாகக் கொடுத்தது இளையராஜா செய்த அபாரமான சாதனை. இசையின் சட்டகத்தினுள் இருந்த எண்ணிலடங்கா சாத்தியங்களை இவர் பாடல்கள் திறந்து காட்டின. பலர் இளையராஜாவின் திரையிசை மூலம், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை எதிர்ப்பாதையில் சென்றடைந்தது வேறெங்குமே நடக்காத மாற்று நிகழ்வுகளாகும்.  பல ராகங்களை திரைப்பாடல்களில் கையாண்ட இவரின் பாண்டித்தியத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட இசைப் பாணியை மட்டுமே திரையிசையில் நிகழ்த்த முடியும் என்ற கருத்தை மாற்றி, பின்ன்ணி இசையைத் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே ஆக்கிய சாத்னையும் இவரது.
howtonameitதிரையிசை வட்டத்தைத் தாண்டி 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ எப்படிப் பெயரிட ‘( How to Name it) என்ற இசைத் தொகுப்பை இளையராஜா வெளியிட்டார் (இதில் பிரதான வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். கடந்த வருடம் இவர் ராகசாகா என்ற சங்கம இசைத் தொகுப்பை வெளியிட்டார்). இன்று, திரைப்பட இசை வெளியிடுவது ஒரு பிரம்மாண்டச் சடங்காக மாறியுள்ளது. யூ ட்யூப் முதல் பல வலைத்தளங்களில் ஒளித்தொகுப்புகளாகவே இவை நமக்குக் கிடைக்கின்றன. 1986 ஆம் ஆண்டு ‘எப்படிப் பெயரிட’ இதே போல் ஒரு பொது அரங்கில் வெளியானது. ஆனால், இன்று அந்த வெளியீட்டு விழா பற்றி துணுக்குச் செய்திகள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன; ஒரு புரட்சிகரமான தொகுப்பாக இந்திய அளவில் அது கவனிக்கப்படவில்லை. ஒரு அகழ்வாராய்ச்சி போல் தேடினால் மட்டுமே சிதிலங்களாய் ஒரு சில விவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையான பார்வையை கொடுப்பதில்லை.
அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. (முழுக் கட்டுரையை கடைசியில் இணைத்திருக்கிறேன்.) இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.
மேற்கிசை உலகில் நடந்த ஒரு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம் – May 29, 1913 ஆம் ஆண்டு ‘The Rite of Spring’ எனும் நடன-இசை பாரீஸில் கூச்சல், அடிதடிக்கிடையே அரங்கேற்றம் ஆனது. இன்றும்,அது உருவாக்கிய அதிர்வலைகளை ஆச்சர்யத்துடன் இசைக் கலைஞர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த இசை இருபதாம் நூற்றாண்டை வரவேற்ற நவீன மேற்கிசைப் பாணியாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி பற்றி பலவிதமான ‘கதை’களும் உருவானது. பார்வையாளர்கள் மத்தியில் ஹிட்லரும் இருந்தார் என்பது அதில் புகழ் பெற்றக் கதை. இப்படியாக, ஒரு நிகழ்வைத் தொகுப்பதோடு மட்டுமல்லாமல் (வெளியான தேதி, நேரம் உட்பட), விழாவில் கலந்துகொண்டவர்கள், இசை நுட்பங்கள், அதன் கதைகள், கட்டுக்கதைகள் எனத் தொகுக்கும் வழக்கம் மேற்கிசை உலகில் உள்ளது.
The Rite of Spring இசையில் உள்ளது போன்ற ஆழமான இசை நுட்பங்கள் இளையராஜாவின் எப்படிப் பெயரிட’ இசைத்தொகுப்பிலும் உண்டு. அதேபோல், இத்தொகுப்பில் கறாரான கர்நாடக மரபுகளுக்கு உட்பட்டவை தவிர மரபை மீறிய இசையும் உள்ளது. `
சுஜாதா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாத கணையாழியின் கடைசி பக்கத்தில் – `இளையராஜாவின் How to Name it ,It is Only Wind (Nothing But Wind தொகுப்பை இப்படிக் குறிப்பிடுகிறார்) போன்ற வினோதப் பெயர்களுடன் ஸிம்பொனியையும் சிம்மேந்திரமத்திமத்தையும் ஒட்ட வைக்க பெரும்பாடு பட்டாலும் கேட்கும்போது திட்டு திட்டாகத்தான் இருக்கிறது. சங்கராபரணம் ஒரு மேஜர் ஸ்கேல் என்றும் கீரவராளியோ ஏதோ மைனர் ஸ்கேலுக்கு சமானும் என்றும் ப்ரொபஸர் ராமநாதன் சொல்லியிருக்கிறார். இருந்தும் இரண்டையும் இணைக்கும் முயற்சிகள் வெள்ளைக்காரிக்கு தலைபின்னி பூ வைத்தாற் போகத்தான் அசம்பாவிதமான இருக்கின்றன. காரணம் , இரண்டும் அமைப்பில் அஸ்திவாரத்தில் வேறுபட்டவை. மேஜர், மைனர் என்பது ராகங்கள் அல்ல. அவை ஸ்வரங்களுக்கு இடையே ஆன ஒருவித பிணைப்பு, அல்லது உறவுமுறை` என இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுக்கும் விதமான விமர்சனத்தை முன்வைத்தார். இப்படிபட்ட தன் வயப்பட்ட கருத்துகள் இத்தொகுப்பின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறியது.
இத்தொகுப்பை ரசிக்க சங்கம (Fusion) இசையின் இலக்கணத்தை புரிந்து கொள்வது அவசியம். சங்கம இசைக்கென்று இலக்கணம் எதுவும் இல்லையென்றாலும் அதில் வாத்தியங்களும், ஒலியமைப்பும் கையாளப்படுவதைப் பொறுத்து இரண்டு அமைப்புகளைக் கொண்ட இலக்கணத்தை உருவகிக்கலாம்.
இரண்டு வகையான சங்கம இசைப் பாணிகள் உள்ளன. முதல் பாணியில் – ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத பல ஒலித் துண்டுகள், ஒரே நேரத்தில் இணக்கமாக, இனிமையாக ஒலிக்கும். இது பண்யிணைப் புள்ளி (Counterpoint) பாணியாகும். இது பிரபலமான பலத் தொகுப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஒலிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இது செங்குத்தான (Vertical) இசை வடிவம் என்றாகிறது.
அடுத்த பாணியில் – வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கும் வெவ்வேறு இசை வடிவங்கள். ஒரு ஒலித் துண்டு குறிப்பிட்ட நேரம் ஒலிக்கும். இதைத் தொடர்ந்து மற்றொரு ஒலி ஒலிக்கும். இப்படி அடுத்தடுத்து தொடர்சியாக வருவதால், இது கிடைநிலை (Horizontal) வடிவம் என்றாகிறது.
இந்த இரு இசைப் பாணியையும் பயன்படுத்தி, மேற்கத்திய இசையில் பல வடிவங்கள் உள்ளன. சொனாட்டா (Sonata), கான்சர்ட்டோ (Concerto), சிம்பொனி (Symphony), காண்டாடா(Cantata), ஃபூக் (Fugue) போன்ற வடிவங்களில் இவ்விரு வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல பிரிவுகள் கொண்டவை. இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி,இனிமையான இசையை கொடுப்பது இவற்றின் பொது அம்சமாகும்.
இளையராஜாவின் இசையின் வேர் ஜான் செபாஸ்டியன் பாக்கின் (Johann Sebastian Bach) இசை பாணியிலிருந்து உருவானது. இவர் திரைப்படங்களிலும் பாக்கின் பாணியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். ஃபூக் அமைப்பில் மேற்கிசையில் முத்திரை பதித்தவர் பாக். முப்பத்துக்கும் மேலான உள்ளமைப்புகளை உடைய ஃபூக், அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டது. சில ஃபூக் அமைப்புகள் மூன்றுக்கு மேற்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கும். முதல் பகுதியும், கடைசி பகுதியும் ஒரே வகையான ஒலிகளைக் கொண்டிருக்கும்(அவை வேகத்தில் மாறுபடலாம்) . நடுப்பகுதியில் மட்டும் சில மாற்றங்களுடன் ஒலித்து, முதல் பகுதி இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி, அவை ஒலிக்கவேண்டிய வரிசையில் ஒன்றாகக் கோர்ப்பது இசை ஒருங்கிணைப்பாளரின் (Conductor) மிகப்பெரிய சவாலாகும்.
இந்த வடிவத்தை இளையராஜா பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களிலும், பின்ணனி இசையிலும், ஃபூக்கின் பல சாத்தியங்களாக நுழைத்துள்ளார். பண்யினைப் புள்ளி உத்தியை கச்சிதமாக பயன்படுத்தும் இசை பாணியாக ஃபூக் இருப்பதால், பல இசைக் கருவிகளின் சங்கமமும் இங்கு சாத்தியமாகிறது.
திரைப்படத்தின் பின்ணனியில் இருவித வயலின் இசை ஒன்றாகச் சேர்வதும் நடுவே ஒரு இனிமையான குழலோசை ஒலிப்பதும் பண்யினைப் புள்ளியில் சேர்வதால் இனிமையான இசையாகிறது. இவை மட்டும் போதாது. சரியான தொனியில், தேவையான கால அளவில் ஒலித்தால் மட்டுமே இது இனிமையான இசையாகும். இல்லையென்றால் வெவ்வேறு இசையாக தனித்தனியாக ஒலித்து, இனிமையற்றதாக மாறிவிடும்.
‘How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலகஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.
உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில் I met Bach in my house மற்றும் ..and we had a talk பாடல்களில் எந்த புதுமையும் இல்லை, ஏதோ ஒரு இந்திப் பாடலை நினைவூட்டுகிறது என்ற ஒற்றை வரியில் இப்பாடல்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், உண்மையில் பாக் வழியை பின்பற்றி அமைந்த முத்திரை பாடல்களாக ‘I met Bach in my house’ மற்றும் ‘..and we had a talk’அமைந்திருக்கிறது. இவை இளையராஜாவின் இசையில் வெளிபட்ட பாக்கின் தாக்கத்தை திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது. சங்கம இசையின் கருத்தை தெளிவாக உணர்த்தும் இப்பாடல்கள், இவ்விரு இசை மேதைகளின் ராக அலங்காரங்களை அருகருகே நம் கண் முன் நிறுத்துகிறது.நம்மை சந்திக்க வரும் விருந்தாளிகளுக்கு நம் முறைப்படி வரவேற்பு கொடுப்பது வழக்கம். நம் விருந்தாளிக்கு புரியும் மொழியில் பேசினால் மட்டுமே கருத்து பரிவர்த்தனை நடக்கும். இதை மனதில் கொண்டு, இளையராஜா கர்நாடக ராக பாணியில் பாக்கின் புகழ் பெற்ற வயலின் இசை வடிவமான Goldberg variations மற்றும் Bourre in E minor இரண்டையும் நிகழ்த்திக்காட்டுகிறார். `நம் இசை வடிவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கேளுங்கள்` – என பாக்கை நோக்கி இளையராஜா சொல்வது போல் இந்தப் பாடல் இருக்கிறது.
தொடர்ந்து இக்கட்டுரை இதே போன்ற தட்டையான பார்வையை முன்வைக்கிறது. இதன் உச்சகட்டமாக, Is it Fixed, The Study of Violin, You Cannot be free என்ற பாடல்களில் எந்த புதுமையும் இல்லை , இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களை நினைவூட்டுகிறது என்று சில வார்த்தைகளில் இப்பாடல்களில் நுட்பம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா? இப்பாடல்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது?
இப்பாடல்கள் மூலம் இளையராஜா உருவாக்க விரும்பும் உணர்வுகள் மிக நுட்பமானவை. இம்மூன்று பாடல்களும் உருவாக்கும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமானவை. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனாலும்,இந்த மூன்று பாடல்களும் மரபான இந்திய மற்றும் மேற்கிசை வடிவங்களிலிருந்து விலகி உள்ளன. குறிப்பாக, நேர அளவுகள்(தாளங்கள்) மிகச் சுதந்திரமாக கையாளப்பட்டிருக்கின்றன. இச்சுதந்திரம், ஜாஸ் பாணியில் வழுக்கிச் செல்லும் ஒலிகளை உருவாக்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் கறாரான இலக்கணத்தை மீறும் முயற்சிகளைச் செய்திருப்பது , புரட்சிகர இசையாக இன்றும் இதை நிலைநிறுத்துகிறது. பாடல்களின் பெயர்கள் இசையமைப்பாளரின் எண்ணத்தையும், மரபு மீறிய முயற்சியயும் பிரதிபலிக்கவே செய்கிறது.ஒரு குறிப்பிட்ட மேற்கிசை வடிவத்தில் இந்த மூன்றும் பொருந்துவதில்லை. சோதனைப் பகுதிகளாக ஒலிக்கும் இவை சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. ஆனாலும், இவை அடிப்படையில் கர்நாடக ராகங்களை மையமாகக்கொண்டு அமைந்த பாடல்கள். அம்மரபுகளை மீறுவதில் உள்ள முனைப்பு பாடலின் அமைப்பிலும் அதன் பெயரிலும் தெரிகிறது.
மேலும், கோட்பாட்டு ரீதியில் இவை இசையின் இரு நிலைகளை உணர்த்துகிறதாகத் தோன்றுகிறது. கர்நாடக சங்கீதத்திலுள்ள கறாரான இலக்கணங்களுக்கிடையே நிலவும் சுதந்திரம் இம்மூன்று பாடல்களிலும் வெளிப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தின் கட்டமைப்பில், மேற்கிசை வடிவங்கள் இணைவதன் மூலம் இச்சுதந்திரத்தின் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
இப்படிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு – இதைப் போன்ற இசையை அவர் திரைப்படப்பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் ஏற்கனவே நிகழ்த்திக்காட்டியுள்ளார். அதனால் பல பாடல்களையும் சிறு துண்டுகளாக இணைக்கும் உணர்வே ஏற்படுகிறது – என்பதாகும். இந்திய இசை வரலாற்றில் இதற்கான பதில் உள்ளது.
கர்நாடக இசை தோன்றிய காலத்திலிருந்து , இந்த டிசம்பர் சீசன் வரை பாடப்படும் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அடிப்படையில் இந்தப் பாடல்களை பாடகர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுவர். இதை Rendition – நிகழ்த்துதல், பாடும் பாணி என சுதந்திரமாக தமிழாக்கலாம். திரையிசையில் இளையராஜா உபயோகித்த ராக வெளிப்பாடுகள் இத்தகைய தனி பாணியாகும். ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை உபயோகித்து இனிமையான பல பாடல்களை உருவாக்கியுள்ளார். பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளை உபயோகித்து, உறுத்தாத பல இசைத் துண்டுகளை திரைக்கதைக்கேற்ப பிண்ணனியில் இசைத்துள்ளார். குறிப்பாக, கிராமிய இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை சரியான கலவையில் தன் முதல் படத்திலிருந்து உருவாக்கி வருகிறார். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் இம்முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றன.
இத்தொகுப்பின் மையக்கருத்தை அடிப்படையாக்கொண்டு மூன்று பாடல்கள் உள்ளன. இவை இத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மூன்று பகுதிகளைக் கொண்ட `எப்படிப் பெயரிட` பாடல் ஃபூக் அமைப்பைக் கொண்டது. தெளிவான சிம்மமேந்திர மத்யமம் ராகத்தில் தொடங்கி, சண்முகப்பிரியாவில் கலக்கும் முதல் பகுதி, நடுப் பகுதியில் உள்ள வீணை, வயலின் அமைப்புக்கு அழைத்து செல்கிறது. இரண்டாவது வயலின் ஸ்வரங்களுக்கிடையே குதித்து மேற்கிசை பாணியில் ராகங்களுடன் இணைகிறது.
இத்தொகுப்பிளுள்ள இசையை கேள்வி-பதில் பாணியில் புரிந்துகொள்ளலாம்.சில ஒலிகள் கேள்விகளாய் முன் வைக்கும் இடத்திலிருந்து வரும் புதிய ஒலி பதிலாக மாறுகிறது. இது இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தப் பாடலில் முதன்மை வயலினும், இரண்டாவது வயலினும் கேள்வி கேட்பது போல் உயரச் சென்று ஸ்வரங்களை நிறுத்துகிறது. இந்நிலையில் ஸ்வரங்கள் உருவாக்கு இசை முடிச்சுக்களை உணரலாம். பின்னர் பதில் சொல்லும் வகையில் அடுத்த பகுதி இம்முடிச்சை விலக்குகிறது.
அடுத்தப் பாடலான `Mad Mad Fugue’ சுத்தமான ஃபூக் அமைப்பாகும். இத்தொகுப்பிலுள்ள மற்ற பாடல்களை விட இப்பாடல் தெளிவான கட்டமைப்பைக் கொண்டது. திட்டவட்டமான செவ்வியல் தன்மையான ஃபூக் அமைப்பில், நிகழ்கால வாத்தியக்கருவியான டிரம்ஸ் இணைகிறது. இப்படிப்பட்ட இசைக்கோர்வையின் நிர்வகிப்பு ஒருங்கிணைப்பாளரின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. ஸ்வர வரிசையின் (ஸ்வரமாலையின் (Chromatic) ) தேர்வு பிரம்மாண்டமான வடிவமைப்பாக உருவாகிறது. குறிப்பாக, கடைசி ஒரு நிமிடத்தில், வயலினும் டிரம்ஸும் செய்யும் சாகசங்கள், திரைப்பட உச்சகட்ட காட்சி போல வேகமாகச் செல்கிறது. மிகக் கட்டுக்கோப்பான ஃபூக் வடிவத்தில் மின்னல் வேகத்தில் நுழையும் இந்தப் பகுதி, பாடலின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது.
Chamber Welcomes Thyagaraja பாடல் ஒவ்வொரு இசைக்கருவியும் கல்யாணி ராகத்தை விரிவாக கையாள்கிறது. இரண்டாவது பகுதியில் இணையும் மேற்கிசை ஒலிகள், ஒற்றை வயலினுடன் சேர்ந்து கம்பீரமான இசை வடிவமாக மாறுகிறது. தியாகப்பிரம்மம் இப்படியொரு குழு இசை நடக்கும் அரங்கில் நுழைந்தால், அவரை வரவேற்க ஒலிக்கப்படும் வரவேற்பு இசை போல் கம்பீரமாய் முடிகிறது.
இத்தொகுப்பு இளையராஜாவின் இசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளுக்காக படைக்கப்பட்ட விருந்தாகும். தன் இசையின் வேர் இவர்களிடம் தொடங்குவதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மேலும், சம்பிரதாயமான இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் விலக இளையராஜா எடுத்த முக்கியமான முயற்சி. இதில் பல தொழில்நுட்ப புதுமைகளையும் அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஷெனாய், பசூன் (Bassoon) போன்ற புதுவித குழற்கருவிகளை உபயோகித்துள்ளார். எந்த புது பாணியும் காற்றிலிருந்து தோன்றுவதில்லை.
கலைஞனுக்குள் எழும் கேள்விகளே கலையாய் வெளிப்படுகின்றது. இளையராஜா எடுத்துக்கொண்டிருக்கும் கரு, முதல் திரைப்படத்திலிருந்து அவருடன் இருந்தவை – குறிப்பாக சங்கம இசை முன்வைக்கும் சவால். இரு இசை வடிவங்களின் சங்கமத்தை, முதல் திரைப்படத்திலிருந்து கையாண்டு வந்தாலும், இத்தொகுப்பு பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இதில் முன்வைத்திருக்கும் சவால் இன்றும் இளையராஜாவைத் தொடர்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக, You cannot be free, Is it fixed போன்ற பாடல்கள் உருவாக்கிய புதிய இசை பாதைகள், பாக்கின் Goldberg variations போல் இன்றளவும் யாரும் தாண்டிச்செல்ல இயலாத முயற்சியாய் இருப்பதே இத்தொகுப்பின் வெற்றி.
20091463252054288135அசோகமித்திரன் கட்டுரையிலிருந்து…
“இந்த ஊரில் உள்ள சங்கீத வித்வான்கள் அனைவருக்கும்தான் நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்” என்று இளையராஜா கூறினார். ஆனால், அவருடைய புதிய படைப்பான `எப்படிப் பெயரிட` இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் அநேகமாக எல்லாருமே சினிமாத் துறையினர்தான். டி.வி.கோபால கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கோபால கிருஷ்ணனையே பாதி சினிமாக்காரர் என்று நினைப்பவர்களுண்டு.
சங்கீதத் துறையினர் வரவில்லை என்றாலும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, இளையரஜாவின் மேற்கு-கிழக்கு இசை இணைப்பு முயற்சிகள் ரசமானவை; பல ஆண்டுகள் முன்பு அவரே எண்ணியிருந்த முயற்சிகள் என்றார். பழுத்த அனுபவம் மிகுந்த பியானோ நிபுணரான ஹாண்டல், இளையராஜாவிடம் அழைத்துச் சென்ற மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜாவின் கிரகிப்பு ஆற்றலையும், திரைப்படக் காட்சிக்கு ஏற்றபடி நொடிப்பொழுதில் இசை அமைத்து அதை வாத்திய கோஷ்டிக்குத் தெரிவித்து ஒலிப்பதிவு செய்யும் திறமையையும் கண்டு வியந்திருக்கிறார்கள் என்றார். `எப்படிப் பெயரிட` இசை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்திய விழாவுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும் என்றார். நாற்பதாண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பெருமதிப்புக்குரியவராக இருந்து வரும் நெளஷாத் அவர்கள் இளையராஜாவிடம் கற்க நிறைய இருக்கிறது என்றார். இவை எல்லாம் சாதாரணமாகக் கிடைக்ககூடிய பாராட்டுகள் அல்ல.
வெறும் டியூன்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால் `எப்படிப் பெயரிட` இளையராஜாவின் பல முக்கிய திரைப்படங்களின் சிறப்பான இடங்களை நினைவுபடுத்தும். ஆனால் இந்தப் படைப்பின் சிறப்பம்சம் வாத்திய கோஷ்டி நிர்வகிப்பு; திரு.வி.எஸ். நரசிம்மனின் பிரதான வயலின்; சுவரூபத்தைக் கலைக்காதபடி இந்திய ராகங்களுக்கு மேலைய இசை வடிவம் தருதல். இத்திசையில் முயற்சிகள் இதுவரை செய்யப்படவே இல்லை என்று கூற முடியாது. ஐந்தாறு மாதங்கள் முன்பு ஒரு போர்ச்க்கீசிய இசைக்குழுவுடன் சென்னை வந்த வயலின் நிபுணர் எல்.சுப்பிரமணியன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய முயற்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
`சங்கீதக் கனவுகள்` என்ற நூலின் ஒவ்வொரு எழுத்தும் இளையராஜாவால் எழுதப்படாமல் இருக்கலாம். இளையராஜா எழுத்தாளரல்ல. ஆனால் நூலில் கூறப்பட்டிருக்கும் அனுபவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அவருடையதே என்பதைச் சந்தேகிக்க இடமில்லை. உண்மையில் இம்மாதிரி நூல்களில் இவைதான் முக்கியம். ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இசை மேதைகளின் இல்லங்கள் ஷேத்திரங்களாகப் பராமரிக்கப்பட்டு வரும் விசுவாசத்தைக் கண்டு மனமுருகி, `நமது நாட்டில் தியாகப்பிரும்மம் வாழ்ந்த வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது…20091463252054288135என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.
நன்றி – ரா.கிரிதரன் (சொல்வனம் – இணைய மாத இதழில் வெளியானது) பலரை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்த மறு பதிப்பு

இசைஞானியின் இசையில் திருவாசகம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்.

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.


ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் அலுத்துபோகாத மேதமை இன்றும் அதீத உற்சாகம் தருவதாக இருந்தது.

இவ்வளவு திரையிசை பாடல்களை தொடர்ச்சியாக நான் கேட்டதேயில்லை. எப்படியும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கேட்டிருப்பேன்.


இதில் பகல் எல்லாம் பாட்டு கேட்பது, படுக்கையில் கிடந்தபடியே இரவெல்லாம் கேட்பது. விழித்து எழுந்தவுடன் சில மணி நேரம் கேட்பது என்று விருப்பமான மனிதரின் கையை பிடித்துக் கொண்டு சுற்றியலைவது போலகேட்டுக் கொண்டேயிருந்தேன். புத்தகங்கள் திரைப்படங்கள் எதிலும் நாட்டம் திரும்பவேயில்லை.

சிறுவயதில் பல பாடல்களை இசைதட்டில் கேட்கும் போது ஏற்படும் நெருக்கம் திரையில் பார்க்கும் போது ஏற்படாது. அதற்கு மாறாக சில பாடல்களைக் கேட்கும் போது நடிகர் நடிகைகளை மறந்து கேட்க முடிவதேயில்லை. எல்லா ஊர்களிலும் அந்த காலத்தில் ஒரு டி.எம்.எஸ், ஒரு சுசிலா இருந்தார்கள். அவர்கள் சினிமா பாடல்களை அப்படியே அச்சு பிசகாமல் அதே குரலில் பாடி கைதட்டு வாங்குவார்கள்.

என் பள்ளியில் கூட ஒரு சுசிலா படித்தாள். அவளை தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்காகவே வைத்திருந்தார்கள். பள்ளிவிழா நாட்களில் அவள் சினிமாபாடல்களை பாடுவாள். அந்த பாடல்களை அத்தனையும் சிறப்பானவை. எப்படி அதை தேர்வு செய்து அந்த பாடல்வரிகளை நினைவில் வைத்திருந்து பாடுகிறாள் என்று வியப்பாக இருக்கும்

அது எம்எஸ்விஸ்வநாதன் காலம். ஒருமுறை எம்.எஸ்வி கச்சேரிக்காக விருதுநகர் வந்திருந்தார். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே எங்கே நிம்மதி கேட்டோம். அந்த நாட்களில் திரையிசை பாடல்கள் மட்டுமே வெகுமக்களின் பிரதான ரசனையாக இருந்தது. எல்லா வீட்டில் அந்த பாடல்கள் முணுமுணுக்கபட்டன. விசேச நாட்களில் காலை துவங்கி இரவு வரை ரிக்கார்ட் போட்டார்கள்.

அந்த நினைவில் பாடல் என்றாலே உரத்தசப்தத்தில் கேட்க வேண்டும் என்று உள்ளுற பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபடுவதற்கு பல வருசங்கள் ஆகிப்போனது. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். அவருக்காகவே படம் பார்த்தார்கள். அப்போது தான் டூ இன் ஒன் அறிமுகமானது. ஆகவே பாடல்களை ரிக்காடிங் சென்டரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.

உதிரிப்பூக்கள் முள்ளும் மலரும் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று இளையராஜாவை பற்றி பேசாத நாட்களே இல்லை. அது வளர்ந்து எண்பதுகளின் உச்சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்கும் ஆளாகியிருந்தேன். ஏதாவது ஒரு படத்தை இரவுக்காட்சி பார்ப்பது என்பது பல வருடமாக எனது வழக்கம். அப்படி படம்பார்த்துவிட்டு திரும்பும் பின்னிரவில் ஆள் அரவம் அற்றுப்போன தெருவில் சைக்கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளையராஜாவை பற்றி பேசிக் கொண்டிருப்போம்.

எல்லா ஊரிலும் பின்னிரவிற்கு என்றே ஒரு டீக்கடை திறந்திருக்கும். அங்கே நிச்சயம் இளையராஜாவின் பாடல் ஒன்றை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ப்ரியா பாடல் வந்த புதிதில் அதை ஒரு நாளைக்கு ஐம்பது தடவை கேட்ட நண்பர்கள் என்னோடு இருந்தார்கள். அது ஒரு மயக்கம். சினிமாவை மீறிய பாடல்களை கேட்கவும் பின்னால் அலையவும் செய்த நாட்கள் அது.

இளையராஜாவின் திருவாசகம் வெளியான நாட்களில் நானும் இயக்குனர் ஜீவாவும் ஒரு நாளிரவு காரில் மகாபலிபுரத்திற்கு சென்றிருந்தோம் வழி முழுவதும் , காரில் திருவாசகம் ஒலித்தபடியே வந்தது. முதன்முறையாக கேட்டபோது அதை மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. முக்கிய காரணம் அந்த பாடல்களை ஒதுவார்கள் பாடி கேட்டிருக்கிறேன். அது மனதில் அழியாமல் ஒலித்தபடியே இருந்தது.

ஆனால் அன்றைய இரவில் கடற்கரை அருகில் நல்ல இருளில் மணல்வெளியில் அமர்ந்தபடியே திருவாசகம் கேட்ட போது புற்றில் வாழ் அரவம் வேண்டேன் என்ற வரிகளும் இசையும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்னறியாத துயரும் விம்மலும் உருவாகியது.

கடலின் மீது தொலைவில் தெரியும் ஆகாசத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. வீதிகளை , வீடுகளை துயில் கொள்ள செய்திருந்தது இருள் . யாவையும் விழுங்கியபடியே திருவாசகம் மெல்ல ஒரு அலை காலடியில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசமாக்கி கொண்டிருந்தது. பரவசமும் தத்தளிப்பும் கூடிய அப்படியான மனநிலை சில தருணங்களிலே தான் ஏற்படுகிறது.

எங்கோ அந்த இருளினுள் புன்னகையுடன் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற நெருக்கம் உண்டானது

பால்யவயதிலிருந்து கேட்டிருந்த தேவாரம் திருவாசகம் மனதில் ஏற்படுத்தியிருந்த அத்தனை திரைகளையும் விலக்கி இன்னொரு தளத்தில் திருவாசகம் ஒலிக்கிறது. அது ஆன்மீக அனுபவமல்ல. மாறாக தன்னிருப்பின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். இசை உயர்கிறது. குரல் ஆழந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மனது நிலை கொள்ள மறுத்து நழுவுகிறது. காற்றில் படபடக்கும் ஈரத்துணியின் சில்லிடலைப் போல ஏதோவொரு சில்லிடலை தருகிறது இசை .

இதே போன்ற ஒரு அனுபவத்தை திருச்சுழி கோவிலில் ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். பிரகாரத்தில் நடந்து வரும் போது எங்கிருந்தோ நாதஸ்வரத்தின் மயக்கும் இசை மிதந்து வந்தது. கல்படியில் அமர்ந்திருந்தேன். யானையின் காது அசைவது போல, தன்னியல்பாக விரிந்து அசைந்து கொண்டிருந்தது இசை. பிரகாரத்தில் யாருமில்லை. நூற்றாண்டுகளாக உறைந்துகிடந்த கற்சிற்பங்களில் கூட நெகிழ்வு கூடி கண்கள் சொருகியிருப்பது போன்று தோன்றியது. நாதஸ்வர இசையென்பது தாழம் பூவின் அடர்மணம் போன்றது. தனியானதொரு சுகந்தம்.

யார் வாசிக்கிறார்கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்றவில்லை. ஆனால் இசை நின்ற போது கண்ணுக்கு தெரியாத குளிர்ச்சி அந்த மண்டபம் எங்கும் படர்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

யாரோ முகம் தெரியாத ஒரு இசைக்கலைஞன் தன் நூற்றாண்டு கால துயரத்தை நாதஸ்வரத்தின் வழியே வழிய விட்டிருக்கிறான்.

அரக்கினை போல பிசுபிசுப்பாக உடலில் ஒட்டுகிறது இசை. என்ன அனுபவமது. உடலின் நரம்புகள் நடுங்க துவங்கியிருந்தன, கைரோமங்கள் குத்தியிட்டு நின்றன.

சிவனின் மீது விழுந்த பிரம்படி ஊரில் இருந்த யாவர் முதுகிலும் விழுந்தது என்ற புராண கதையைப் போன்று கோவிலின் பூஜைக்கு வாசிக்கபட்ட இசை, பிரகாரம் தாண்டி, சிற்பங்கள், தாண்டி கல் மண்டபம் தாண்டி தெப்பம் கடந்து திறந்த காதுள்ள யாவருக்குள்ளும் நிரம்பி வலியும் சந்தோஷமும் ஒருங்கே தருவதாகயிருந்தது.

கிட்டதட்ட அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை திருவாசகம் கேட்கும் போது உணர்ந்தேன். அதன்பிறகு ஒரு வார காலத்திற்கு வேறு எதையும் கேட்கவில்லை. கேட்க தேவையிருப்பதாகவும் மனம்உணரவில்லை. நல்லிசையின் சுபாவம் அது தானில்லையா.

***
நன்றி எழுத்தாளர்.திரு.எஸ்ரா அவர்கள்

செவ்வாய், 9 மார்ச், 2010

இசைஞானியின் சமீபத்திய ப்ரெஸ்மீட் புகைப்படங்கள்

7 Jan 2010 அகி மியூஸிக் நிறுவந்த்தாருடன் நடந்த ப்ரெஸ்மீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.மிக்க நன்றி :-www.chennai365.com

வெள்ளி, 5 மார்ச், 2010

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - ஒன்பதாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசன்க்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - எட்டாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசனக்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - ஏழாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசனக்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - ஆறாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசனக்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - ஐந்தாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசனக்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - நான்காம் பாகம்-அரிய பொக்கிஷம்

=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின்  ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசனக்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.
 

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - மூன்றாம் பாகம்-அரிய பொக்கிஷம்



=======================

இசைஞானி பற்றி பிபிசி தமிழோசை - இரண்டாம் பாகம்-அரிய பொக்கிஷம்


=======================
பிபிசி வானொலியின் பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சம்பத்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த தேனமுத திரையிசைப் பாடல்களை தொகுத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்,சில பகுதிகளில் இசைஞானியின் அருமையான பதில்களும் ஊடே வருகின்றன.திரு.சம்பத்குமார் அவர்களின்  ஒப்பீடுகளும் வர்ணனைகளும் விமரிசன்க்கருத்துகளும் பல சமயம் நம் மனக்கருத்துக்களுடன் ஒத்துப்போய் அட சொல்ல வைக்கின்றன.இதை கேளுங்கள்,இது ஒரு பொக்கிஷம் என உணர்வீர்கள்.இதை யூட்யூபில் தரவேற்றிய மகா ரசிகருக்கு நன்றிகள் பல.
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99