இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் !!!யாரும் தவற விடக்கூடாத ஒன்று!!!

ருமை நண்பர்களே!!!
இசைஞானியுடன் ஒரு இசைப்பயணம் என்னும் அபூர்வமான ஒரு நேர்காணலை இசையருவி சேனலில் இயக்குனர் மிஷ்கின் ஏற்பாடு செதிருந்தார்.மனதுக்குள்  ஆனந்தப் பேரலைகளை ,மிகவும் தோற்றுவித்த ஒரு நிகழ்ச்சி அது என்பேன். நான் நந்தலாலா படத்தை சென்னைக்கு விரைவில் வந்து பார்க்க இருக்கிறேன்.நிச்சயம் அதன் பாதிப்பை நடுக்கத்துடனாவது பதிவு செய்வேன்.  இந்த நிகழ்ச்சி பார்க்கையிலேயே, படத்தை எப்படியும் பார்த்துவிடவேண்டும்,  என்ற ஆவல் ஒருவருக்கு எழுவது திண்ணம்.

தே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில், இசைஞானி உருவாக்கித் தந்த ஐந்து பாடல்களில் மூன்றினை  படத்தில் உபயோகப்படுத்தாததற்கு இளையராஜாவிடமும், அவர் ரசிகர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டார் மிஷ்கின்,   அந்த பாங்கு மிகவும் அரிய ஒன்று.    இவ்வளவு தன்னடக்கத்துடன் மிஷ்கின் பேசி நான் பார்த்ததே இல்லை,எப்போதுமே அறைக்குள்ளேயே குளிர் கண்ணாடி அணிந்து கொள்ளும் மிஷ்கின்,நேர்காணல் ஆரம்பித்த மூன்றாவது நிமிடம், அதை கழற்றியேவிட்டார், அதன் பின்னர் அணியவேயில்லை. 

யக்குனர் மிஷ்கின் இசைஞானியை பாராட்டு மழையில் நனையவிட்டார் என்றால் மிகையில்லை.  யாரும் தவறவிடக்கூடாத நேர்காணல் இது, இது போல இசைஞானி நேர்காணல் கொடுப்பது மிக மிக அபூர்வம்.இதை தயாரித்த இசையருவிக்கும்,யூட்யூபில் வெளியிட்ட டெக்சதீஷ். நெட்டிற்கும் மிக்க நன்றிகள்.
நந்தலாலா படத்தின் மகத்தான 25 பிண்ணணி இசைக்கோர்வைகளை நண்பர் சுரேஷ் குமார் அவரது தளத்தில் தொகுத்திருக்கிறார். தரவிறக்க சுட்டிக்கு
======00000======
பாகம்-1


பாகம்-2

பாகம்-3

======00000======

புதன், 3 நவம்பர், 2010

இசைஞானியின் மீது சாரு வைத்திருக்கும் மரியாதை !!!

அருமை நண்பர்களே!!!,

நான் இன்றைய தேதிவரை எந்த ஒரு இசையமைப்பாளரின் இசையையும் விட இசைஞானியை தன்னிச்சையாக விரும்பிக் கேட்டும் வருகிறேன். சாரு தன் தளத்தில் இசைஞானி பற்றி அவதூறாக கோபமாக பேசியவற்றை நாளடைவில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் உண்டான சச்சரவாகவே பார்க்க பழகிக்கொண்டேன்,எப்படி ஒருவன் தன் கை தவறு இழைத்ததென்று கையை வெட்டிப்போடமுடியாதோ,அப்படித்தான் இசைஞானியின் எதோ சோபிக்காத சில இசைகோர்வைகளை, பாடல்களைக்கேட்டுவிட்டு அவரை தூற்றுவதும்.சேறு வாரி இறைப்பதும், முன்பே சாரு விரும்பிக்கேட்பது இசைஞானியின் இசையே என்பதை கணித்தும் இருந்தேன்.அதற்கு முத்தாய்ப்பாக அமைந்தது சாருவின் தளத்தில் வெளியான இக்கடிதம்.நன்றி சாரு

 

ஒரு அற்புதமான கடிதம்...

 October 31st, 2010
அன்புள்ள சாரு,
வணக்கம்.
நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. ஒரு நல்ல வாசகன், ஒரு எழுத்தாளரை மனதாகக் கொண்டாடுபவன் ஒருபோதும் அவருக்குக் கடிதமெழுத மாட்டான் என்பது என் நிலைப்பாடு. பல வருடங்கள் தொடர்ந்து உங்களைப் படித்து வரும் நான் முதன்முறை உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். புத்தகக் கண்காட்சியில் தூர இருந்து உங்கள் சிரிப்பையும், குழந்தை போன்ற வெகுளித்தனம் ததும்பும் உடல்மொழியையும் எட்ட நின்று ரசித்தவன். உங்கள் எழுத்தை மனதாரக் கொண்டாடி என் வாழ்வோடு பிணைத்துக் கொண்டவன். இதை எழுத்தில் வடிக்கும்போதே அதில் ஓர் ஆபாசம் வந்து உட்கார்ந்து விடுகிறது சாரு. என் இதயத்தில் உங்களிருக்கும் அந்த இடத்தைத் தொட்டுத் தீண்ட உங்களுக்கே கூட உரிமை இல்லை சாரு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். இந்த உலகில் திடீரென்று ஸீரோ டிகிரியின் அனைத்து பிரதிகளும் தொலைந்து போனாலும், எரிந்து போனாலும் பிரச்சினையில்லை சாரு. என் மனதில் இருந்தே வரிவரியாக, எழுத்தெழுத்தாக என்னால் ஸீரோ டிகிரியைத் திரும்ப எழுதிவிட முடியும். நிறுத்தற்குறிகள், காற்புள்ளிகள் உட்பட.
இத்தனை தீவிரமாக இருக்கும் என்னை உங்களுக்குக் கடிதம் எழுதத் தூண்டியது எது? என் மனதில் உங்களிடத்திற்கு ஒரு படி, ஒரே ஒரு படி மேலேயிருக்கும் என் இன்னொரு குருவைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் தவறான அபிப்ராயத்தால்தான்.
இந்த இடத்தில் என் பின்புலத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் தமிழகத்தின் கடற்பகுதியைச் சேர்ந்தவன். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அப்பாவுக்குத் தொடர்ந்து மாற்றலாகிக் கொண்டிருக்கும் வேலை. என் அப்பா பெரிய படிப்பாளி. வாழ்க்கையில் பணத்தைக் காட்டிலும், பகட்டைக் காட்டிலும் – வேறு பல விஷயங்கள் முக்கியமானவை என்பதை நன்கு அறிந்தவர். அவர் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றலாகிப் போனபோது எங்கள் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். எதற்காக? எங்களுக்கு வடகிழக்குப் பகுதியின் பல அழகான விஷயங்களும், கலாசாரமும் அறிமுகமாகவேண்டும் என்பதற்காக. அப்போது கல்கத்தாவில் வசித்தோம். விடாமல் வார இறுதிகளில் தமிழ் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். நானும் தங்கையும் வகுப்பறையில் இருக்கும்போது, அப்போது வெளியே மைதான மரத்தடியில் ஜேம்ஸ் ஜாய்ஸ், ப்ரேம்சந்த் இவர்களைப் படித்துக் கொண்டிருப்பது இன்னும் என் மனதில் நிழலாடுகிறது.  கல்கத்தாவில் 7 வயதிலிருந்து 15 வயது வரை மேற்கத்திய செவ்வியல் இசை கற்றுக் கொண்டேன்.
என் மனம் முழுதும் இசை என்னை ஆக்கிரமித்துக் கொண்டது அப்போதுதான். ஆனால் அப்போதே அப்பா தெளிவாக இசையிலிருந்து இளைப்பாற நல்ல இலக்கியம் அவசியம் என என்னை நல்ல நல்ல தமிழ், இந்தி, ஆங்கில இலக்கியங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சுஜாதா இந்தியா கண்ட தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை என்னால் சத்தியம் செய்து சொல்ல முடியும். உங்களை உலக இலக்கியகர்த்தாக்களில் ஒருவராகவே நான் பார்க்கிறேன். இந்திய எல்லைக்குள் உங்களை சுருக்குவது நான் இலக்கியத்துக்கு செய்யும் துரோகம்.
கல்கத்தாவில் பியானோவும், கிதாரும் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். என் தீவிரத்தைப் பார்த்த அப்பா, மிகவும் தெளிவாகவே நான் லெளகீகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை எனத் தெளிவாகவே சொல்லிவிட்டார். அதனால் நான் மூழ்கிக் கிடந்தது இசை, இசை, இசையில் மட்டுமே. இளைப்பாற மேலே வரும்போது நான் சங்க இலக்கியத்திலும், தங்களிடமும், சுஜாதாவிடமும், தஸ்தோவெஸ்கி, தால்ஸ்தாயிடமும், தாகூரிடமும் இலக்கியம் மூலம் உடையாடியபடி இருப்பேன். கடலிலிருந்து மாலை நேரத்தில் வெளிவந்து மணலில் அமர்ந்திருக்கையில், என் அந்திவானத்தின் பொன்மஞ்சள் நிற சூரியக்கதிர்கள் நீங்களும், இவர்களும்.
மேற்கத்திய இசையில் நல்ல தேர்ச்சி பெற்ற எனக்கு ஒரு இசையமைப்பாளராவதுதான் லட்சியமாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. அப்பா ஒரு தீவிரமான நாத்திகர். அம்மா ஒரு தீவிரமான கத்தோலிகர். அதனால் எனக்கு எப்போதும் சர்ச் சார்ந்த இசை அறிமுகமே இருந்தது. ஒருநாள் என் நண்பன் ஒருவன் வற்புறுத்தி கல்கத்தா வந்திருந்த உஸ்தாத் பிஸ்மில்லா கானின் கச்சேரிக்கு அழைத்துச் சென்றான். அதுவரை மேற்கத்திய இசையை மட்டுமே பெரிதாக நினைத்த என் மனத்தின் அகங்காரம் முற்றாகக் கழன்று விழுந்தது. ஏதோ ஒரு அழகை, என்னவோ என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. அந்த நாளை இன்னும் கூட என்னால் தெளிவாக எழுத்தில் வடிக்க முடியவில்லை.
அப்போது என் தந்தைக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றலானது. புனேயின் கலாசாரச்சூழல் பிடிக்காமல் என் அப்பா, எங்கள் குடும்பத்தை கோலாப்பூரில் குடியமர்த்தினார். வார இறுதிகளில் வந்துவிடுவார். உள்ளுக்குள் ஹிந்துஸ்தானி நெருப்பு எனக்குத் தீராமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. என் பக்கத்துவீட்டுக்காரர்களின் பரிந்துரையின் பேரில் என் குருவை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியவர்கள் என்னை எச்சரித்தே அனுப்பியிருந்தார்கள். அவர் சரியான முசுடு. யாரையும் மதிக்க மாட்டார் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அவருக்குள் மூச்சுக்காற்று போல இசை ஓடிக்கொண்டேயிருந்தது. கூடவே ராமஜபமும். என்னை ஏற இறங்கப்பார்த்த அவர், எதற்காக நான் இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்று கேட்டார். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இசை என்னை உலுக்கி அழவைத்தது. அந்த மனநெகிழ்வு எப்போதும் என்னுடனே இருக்கவேண்டுமென்பதற்காக இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்றேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் உடனே கலங்கி எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்ணீர் வரத்தொடங்கியது. ‘எப்பேர்ப்பட்ட கலைஞர் இல்லையா? அவர் பெயரைச் சொன்னதற்காகவே உனக்கு சங்கீதம் கற்றுத்தர முடிவு செய்துவிட்டேன். தினம் ஒரு ரூபாய் காணிக்கை அந்த உண்டியலில் போட்டுவிடு. அது என் ராமருக்கு’ என்று என் சிட்சை தொடங்கியது.
ஊரெல்லாம் முசுடு என்று ஒதுங்கிப்போகும் அவர், உள்ளுக்குள் ஒரு குழந்தை என சில நாட்களிலேயே தெரிந்தது. எந்நேரமும் நாத லயிப்புதான் அவருக்கு. மோகமுள்ளில் பாபுவின் குரு ரங்கண்ணாவைப் போல. இந்தியாவின் கிட்டத்தட்ட அத்தனை இசைமேதைகளையும் கேட்டுவிட்ட என்னால் அவர் ஒரு மாமாபெரும் இசைமேதை என நிச்சயம் சொல்ல முடியும். திடீர் திடீரென்று மனம் நெகிழ்ந்து ஏதாவது இசைமேதையைப் பற்றிப் பேசத்தொடங்கிவிடுவார். ரோஷன் இசையமைத்த ‘ஏ இஷ்க்கு இஷ்க்கு ஹைன் இஷ்க்கு இஷ்க்கு’ கவ்வாலியைக் குறித்து அவரால் கண்ணீர் சிந்தாமல் பேசவே முடியாது. எல்லா இடத்திலும் அவருக்கு ஏதோ இசை கேட்டுவிடும்.
ஒருநாள் மிகவும் நெகிழ்ந்த மனநிலையிலிருந்த அவர், என்னைப் பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். ‘எப்பேர்ப்பட்ட கலைஞன்! நீயும் தமிழந்தானே… நீதான் எத்தனை கொடுத்துவைத்தவன்!’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார். அவர் பல கர்நாடக இசைமேதைகளை – ஜி.என்.பி, ராம்நாட் க்ருஷ்ணன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களைக் கொண்டாடுபவர் எனத் தெரியும். அதுபோக அந்தக்கால தியாராஜ பாகவதர், சின்னப்பா தொடங்கி கே.வி.மகாதேவன், சி.ராமச்சந்திரா, சுப்பாராவ், ஜி.ராமநாதன் என அத்தனை பேரின் முக்கியமான படைப்புகளையும் கேட்டவர். வருடத்தின் பாதியை அவர் பயணத்தில், கோயில்களை தரிசிப்பதில் செலவழிப்பவர். இந்தியாவின் அத்தனை பகுதிகளையும் அவர் நடந்தே சுற்றியிருக்கிறார். ஒவ்வொரு பகுதியின் முக்கியமான பல இசைக்கலைஞர்களையும் அதனால் அவர் தெரிந்து வைத்திருந்தார். அப்படித்தான் தமிழக இசைமேதைகளும் அவருக்கு அறிமுகம். அதனால் அன்றைய உருப்படி யாராயிருக்கும் என்று எனக்குள் குழப்பம்.
‘என்ன கலைஞனடா இவன்! இவனுடைய பிற பாடல்கள் கிடைக்குமா? உனக்கு நிச்சயம் தெரிந்திருக்குமே?’ என்றார். அவர் அப்படி உருகிக்கேட்ட இசைக்கலைஞனின் பெயர் ‘இளையராஜா’.
எனக்குத் தீயை மித்தது போலிருந்தது. நான் சினிமாக்காரர்களையே ஒத்துக்கொள்கிறவன் இல்லை. பீதொவன், மொட்ஸார்ட், பாஹ், உஸ்தாத் பிஸ்மில்லாகான், உஸ்.ஆமிர்கான், உஸ்.அல்லாடியாகான், கொஞ்ச கொஞ்சம் கர்நாடக சங்கீத மேதைகள் போன்றோரின் இசையைக் கேட்டுவளர்ந்தவன் நான். அதனாலேயே கொஞ்சம் திமிரோடு இருப்பவன். ஆனால் என் குரு சொல்லும் திரையிசைக்கலைஞர்களான எஸ்.டி.பர்மன், நெளஷாத், பழைய இசைமேதைகளை ஒத்துக்கொள்பவன். இப்போது திடீரென்று இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறாரே? அடுத்து தேவாவா? (அப்போது ரஹ்மான் வந்திருக்கவில்லை) என அதிர்ந்தேன்.
அவர் எனக்குப் போட்டுக்காட்டிய பாட்டு – ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற ‘நாயகன்’ திரைப்படப்பாடல்.
அதை முதல்முறை கேட்டவுடனேயே நான் அது ஒரு இசைச்சாதனை எனக் கண்டுகொண்டேன். அப்பாடல் இன்றும் பெரும்பாலானோரால் தேஷ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது ஷ்யாம்-கல்யாண் என்ற அரிதான ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடல். என் குரு மீண்டும் மீண்டும் சொன்னார்: “வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” என்ற இடம் முடியும் இடத்திலிருக்கும் ஷ்யாம்-கல்யாணின் பிடியைக் குறித்து அவர் அப்படி சிலாகித்தார். போலவே “இசைமழை எங்கும் பொழிகிறது” என்ற வரி. “என்ன ஒரு ராகம். அதற்கு இவன் தீட்டியிருக்கும் வர்ணம்தான் என்ன!” என்றொரு அங்கலாய்ப்பு அவருக்குள். எனக்கும்தான். நான் ஷ்யாம்-கல்யாண் தவிர இன்னொன்றையும் கண்டுகொண்டேன். எனக்குள் இருந்த மேற்கத்திய இசைக்கலைஞன் விழித்துக்கொண்டான். அப்பாடலில் அவர் அமைத்திருந்த ஹார்மொனி. முக்கியமாக இடையிசைகளில். அப்படியொரு ஹார்மொனியை இந்தியத் திரையிசையில் அதற்கு முன் கேட்டதில்லை. அதை ஃப்யூஷன் என்று சொல்வது அப்பாடலில் வெளிப்பட்டிருந்த மேதைமைக்கு நான் செய்யும் துரோகம். உங்களுக்கே தெரியும் மேற்கத்திய இசையின் சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரம் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் மேற்கத்திய இசையில் அந்த கான்செப்ட் உண்டு. இப்போது அந்த தத்துவத்தை இந்திய இசையில் பொருத்தும்போது, இந்திய மரபிசையின் ராகத்தில் அதில் ஒலிக்கும் ஸ்வரங்களுக்கு ஹார்மொனியான (அதோடு சேர்ந்து கேட்டால் அபஸ்வரமாக ஒல்லிக்காமல், ஒத்திசைவாக இருக்கும் ஸ்வரம்) ஸ்வரத்தை – அதன் கார்ட் வடிவத்தோடு சேர்ந்து இசைத்தால் ஒரு பிரமாதமான இசையனுபவம் கிடைக்கும். இதையே நான் இளையராஜாவின் இசையிலிருந்துதான் புரிந்துகொண்டேன். அப்படி ஹார்மோனியாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்றால் – இந்திய மரபிசை, மேற்கத்திய இசை இரண்டிலும் பிரமாதமான நிபுணத்துவம் இருக்கவேண்டும். அந்த நிபுணத்துவம் வெளியே துருத்திக்கொண்டு தெரியாத அளவுக்கு அழகியல் ரசனை இருக்கவேண்டும்.
பெரும்பாலும் இந்திய இசையில் ஃப்யூஷன் என்று சொல்லப்படுபவை, இந்த இடத்துக்குள் வரவே முடிவதில்லை. மேற்கத்திய ஸ்கேல்களையும், இந்திய ராகங்களையும் அடுத்தடுத்து வாசிக்கும் ஒரு நுட்பமே பெரும்பாலான ஃப்யூஷன்களில் இருக்கின்றன. நான் பெரிதும் மதிக்கும் எல்.சுப்ரமணியம், பண்டிட் ரவிஷங்கர், எல்.ஷங்கர் – ஜான் மெக்லாலின் போன்றோர் செய்யும் ஃப்யூஷன் இந்த வகையே. இந்த தத்துவம் ஒரு பக்கமென்றால் இதே ஹார்மொனி கான்செப்ட்டின் இன்னும் கடினமான வடிவமான கெளண்ட்டர்பாய்ண்ட் இன்னும் இந்திய இசையில் இளையராஜாவைத்தவிர வேறு யாராலும் சிறப்பாக வெளிக்கொணரவே முடியவில்லை. என் கண்மணி உன் காதலன், பருவமே புதிய பாடல் பாடு, சிட்டுக்குருவி முத்தம் தருது – ஒன்றா இரண்டா. உங்களுக்குத் தெரிந்தே இருக்கும் – கெளண்ட்டர் பாய்ண்ட் என்பது ஒரே சமயத்தில் வெவ்வேறு ட்யூன்களை வாசிப்பது. யோசித்துப் பாருங்கள். கேட்பதற்கு ஒரே இரைச்சலாக cacaphony-ஆக இருக்காது? ஆனால் சமகாலத்தில் வாசிக்கப்படும் ஸ்வரங்கள் (வெவ்வெறு ட்யூன்களில் இருப்பவை), ஹார்மொனியாக இருக்கும்போது கிடைக்கும் அனுபவம் out of the world என்று பழங்காடியாகத்தான் சொல்லமுடியும். இளையராஜா இந்த கெளண்ட்டர்பாய்ண்ட் விஷயத்தை மிக மிக சர்வசாதாரணமாகச் செய்கிறார். பல பாடல்களில் நாம் கேட்கும் ஒரு விநாடியில் பின்னணியில் நான்கு வெவ்வேறு ட்யூன்கள் – கிடார், ப்யானோ, வயலின், குரல் – என வந்துபோகும். அக்னிநட்சத்திரத்தின் பாடல்களில் அவற்றைக் கேட்கலாம். கிட்டத்தட்ட எல்லா பாடல்களிலும் அது உண்டு என்றாலும், அக்னிநட்சத்திரம் பிரபலமான ஒன்று என்பதால் அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன். இந்த ஹார்மொனி, கெளண்ட்டர்பாயிண்ட் போன்ற விஷயங்களெல்லாம் தெரியாத பலரும், இதிலென்ன புதுமை – இதைத்தான் எம்.பி.ஸ்ரீனிவாசன் செய்துவிட்டாரே, இதைத்தான் எல்.சுப்பிரமணியம் செய்துவிட்டாரே என்று கேட்கிறார்கள்.
என் குரு இளையராஜாவின் இசையை அறிமுகப்படுத்தியபின் நான் அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு, என் குருவுக்கும் அவ்வப்போது போட்டுக்காண்பிப்பேன். ஒரு கட்டத்துக்கு மேல் என் குரு இளையராஜாவைப் பற்றி எதுவுமே சொல்லுவதில்லை. ஒரு வித ஆயாசம் கூட அவருக்கு வந்துவிட்டது. இந்த மனுஷனைப் பற்றி என்ன சொல்வது என்றுதான். என் குரு கொண்டாடும் பிருந்தாவன ஸாரங்கா, பூர்ய தனஸ்ரீ, கலாவதி – இளையராஜாவுடையது.
என் குருவைப் பார்க்க ஹரிபிரஸாத் செளராஸ்யா அடிக்கடி வருவார். என் குருவைப் பற்றி பொதுஜனங்களுக்குத்தான் தெரியாதே தவிர, ஹிந்துஸ்தானி ஜாம்பவான்களுக்குத் தெரியும். என் குருவின் ஒரு சிறு அங்கீகரிப்பான தலையசைப்புக்காக ஏங்கும் பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். செளராஸ்யா அப்படி அடிக்கடி வந்து அவரிடம் ஆசி வாங்கிச் செல்வார். ஒருமுறை அப்படி அவர் வந்திருந்தபோது பேச்சு இளையராஜாவைப் பற்றி வந்தது. ஹரிபிரஸாத் செளராஸ்யா இளையராஜாவைப் பற்றிச் சொன்னவற்றை யாரும் நம்பமாட்டார்கள். செளராஸ்யா ‘nothing but wind’ என்ற இளையராஜாவின் இசைத்தொகுப்பில் வாசித்திருக்கிறார். தனித்தனி நோட்ஸ்களைப் பார்த்த அவர் அவ்வளவு விருப்பமாக இல்லை. ஆனால் வாசிக்க வாசிக்க அவர் அதில் பொதிருந்த மேதைமையைக் கண்டுகொண்டாராம். அதன்பின்பு அடுத்தடுத்த நாட்களுக்கு வீட்டில் ப்ராக்டிஸ் செய்துகொண்டுதான் போனேன் என்றார் அவர். சாரு, ஹரிபிரஸாத் இப்படியெல்லாம் ப்ராக்டிஸ் செய்துதான் ஒருவிஷயத்தைக் கொண்டுவரவேண்டும் என்றிருக்கக் கூடிய ஆள் இல்லை. அவர் உட்கார்ந்த இடத்தில் இசை பொங்கிப் பிரவாகமாக வரும். அவர் என் குருவுக்காக வாசித்தாத ஹிந்தோளத்தை மூன்று மணி நேரம் கேட்டவன் நான். அப்படியொருவர் சாதகம் செய்துவிட்டு வாசிக்கப்போகிறார் என்றால்? அந்த இசைத்தொகுப்பு வெளியானதும் கேட்டுவிட்டு, தானே கிளம்பி நேரடியாக இளையராஜாவை சந்தித்துப் பாராட்டிவிட்டு வந்தேன் என்றார் அவர். பண்டிட் ரவிஷங்கர், பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி இவர்களும் இளையராஜா மீது மிகமிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள்.
நீங்கள் சொல்லியிருக்கும் செக்கொஸ்லாவேகிய இசைக்கலைஞரின் இசையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். இன்றும் தொடர்பிலிருக்கும் என் கல்கத்தா மேற்கத்திய இசைகுருவின் விருப்பமான கம்போஸர் அவர். அவருக்கும் இளையராஜாவுக்கும் மேதைமை என்றொரு விஷயத்தில்தான் தொடர்பே தவிர, அவரை இவர் காப்பியடித்தார் என்று சொல்வதெல்லாம் சரியில்லை சாரு. இளையராஜா பந்துவராளிக்கும், மேஜர்கார்டுகளுக்கும் இருக்கும் இணைத்தன்மையை வைத்து அமைத்திருக்கும் நான் கடவுள் பின்னணி இசையின் அருகே கூட இவர் நெருங்கமுடியாது. பல இணையதளங்களில் உங்கள் படைப்புகள் லத்தீன் அமெரிகக்ப் படைப்புகளிலிருந்து உருவப்பட்டவை என்று எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போதெல்லாம் என் மனம் எப்படிப் புண்படுமோ, அப்படித்தான் நீங்கள் இளையராஜாவைக் குறித்து உருவுகிறார் என்றபோதும் வலித்தது. அதையெல்லாம் இண்டர்நெட் பொடிசுகள் செய்யலாம் சாரு. நீங்களுமா? மன்னிக்கவும் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது. இந்திய மரபிசையின் ஆதாரமே குருபக்திதான். அதை நான் மீறுகிறேன் என்பது என்னை வேறுவிதத்தில் காயப்படுத்துகிறது. இருந்தாலும் எழுதத்தொடங்கிவிட்டேன்.
உண்மையில் இந்தியாவிலிருந்து உருவான மாபெரும் இசைமேதைகளில் ஒருவர் இளையராஜா சாரு. இதை வேறு யார் சொன்னாலும் நீங்கள் நம்பாமல் போகலாம். ஏழு வருடங்கள் மேற்கத்திய செவ்வியல் கற்றவன், 18 வருடங்கள் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்பவன், எத்தனையோ ஹிந்துஸ்தானி இசைமேதைகளோடு நேரடிப் பரிச்சயம் உள்ளவன், இவ்வளவுக்கும் மேலாக உங்கள் எழுத்தை சுவாசிப்பவன் நான் சொல்வதையாவது கேளுங்கள் சாரு. யாராவது இனிமேல் இளையராஜா இதைக் காப்பியடித்திருக்கிறார் பார் என்று உங்களிடம் சொன்னால், பதிலுக்கு அவர்களை அதில் ஒன்றன் மீது ஒன்றாக வரும் பல லேயர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி எந்த லேயர் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லச்சொல்லுங்கள். திறந்து வைக்கப்பட்ட கற்பூரம் போல் ஆவியாகிவிடுவார்கள்.
இசையைக் குறித்து உங்களிடம் நேரிலும் உரையாட எனக்கு ஆசை. ஆனால் அதற்கு முன் நான் உங்களை நெருங்குமளவுக்காவது தைரியப்படுத்திக்கொள்கிறேன். இந்த டிசம்பர்-ஜனவரியில் தமிழகம் வருவேன். புத்தகக்கண்காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.
நமஸ்காரங்களுடன்,
ராபர்ட் சின்னதுரை
டியர் ராபர்ட்,
என் வாழ்நாளில் எனக்கு வந்த கடிதங்களிலேயே அற்புதமான ஒரு கடிதம் இதுதான்.   எனக்கு இளையராஜா மீது வெறுப்பு இல்லை; கோபம் மட்டுமே.  இசைக் கடவுள் என்று நான் மதிக்கும் பாப் மார்லியை குப்பை என்று சொல்லி விட்டாரே என்ற கோபம்.  தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் இடது கையால் விரட்டி அடிக்கிறாரே என்ற கோபம்.  மக்கள் பாடகனான கத்தரை குப்பை என்கிறாரே என்ற கோபம்.  உலக சினிமாவைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் மிஷ்கினின் நந்தலாலாவுக்கு டப்பாங்குத்து இசை அமைத்திருக்கிறாரே என்ற கோபம்.  அவ்வளவுதான்.  ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  என் சேமிப்பில் இளையராஜாவின் பாடல்கள் தான் அதிகம்.
சமீபத்தில் கூட அவருடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன்.  நவராத்திரி கொலுவுக்கு.  அவர் வீட்டில் சாப்பிட்டேன்.  உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்களே; இனிமேல் இளையராஜா பற்றி என்னால் விமர்சிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று எண்ணி வாழ்க்கையில் ஒருமுறையாவது பாராட்டி விடுவோம் என்று அவருடைய நவராத்திரி இசைக் கச்சேரிகளைப் பற்றிப் பாராட்டி ஒரு பத்திரிகைக்கு எழுதி அனுப்பினேன்.  என் வாழ்வில் நான் எழுதிய ஒரு கட்டுரை முதல்முதலாகத் திரும்பி வந்தது.  அந்தப் பத்திரிகையின் மீதும் கேஸ் போட்டிருக்கிறார் என்று.  என் மனநிலை எப்படி இருக்கும் சொல்லுங்கள்.  சரி, இது இசைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தர்க்கரீதியாக யோசிக்கும் போது புரிகிறது.  ஆனால் நாம் எப்போதும் தர்க்கத்தில் வாழ்வதில்லையே? அந்தக் கடுப்பில் தான் நான் எப்போதோ எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிவேற்றம் செய்தேன்.
மேலும், இளையராஜாவின் மிக நெருங்கிய உறவினர் – அவரது குடும்ப உறுப்பினர் – எனக்கும் நெருங்கிய நண்பர்.  அவர் அழைப்பில்தான் இளையராஜாவின் வீட்டுக்குச் சென்றேன்.
இது உங்கள் கடிதத்துக்கு பதில் அல்ல…  நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  எனவே இது ஒரு மிக அவசரமான பதில்…  விவாதிக்க மாட்டேன்.  உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே செய்வேன்.  என் இலக்கிய ஆசானுக்கு… என்ற உங்கள் கடிதத்தின் தலைப்பைக் கண்டந்தும் என் மலையாள வாசகர்களின் ஞாபகமே வந்தது.  அவர்களிடம்தான் இலக்கியத்தைக் கொண்டாடும் இத்தகைய மாண்பைக் கண்டிருக்கிறேன்.  இங்கே தமிழ்நாட்டில் அவர்கள் என்னை இலக்கிய ஆசானாகவே நினைத்தாலும் அவர்களின் கடவுளான இளையராஜாவை விமர்சித்து விட்டதால் ‘டேய் முட்டாள்…’ என்றே ஆரம்பிப்பார்கள்.  நீங்கள் அப்படி இல்லை.  உங்களிடமிருந்து இசை பற்றி நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.  என்னுடைய கலகம் காதல் இசை என்ற நூலை வாசித்திருக்கிறீர்களா? அதை ஜெயமோகனின் நண்பர் ஒருவர் குப்பை என்று திட்டி எழுதியிருந்தார்.  அவரும் பெரிய இசை ரசிகர்தான் என்று சொல்லியிருந்தார்.  ஆச்சரியமாக இருந்தது.
சாரு
31.10.2010.
4.07 p.m
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99