இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

நிறம் பிரித்துப் பார்த்தேன் பாடலும் சொக்கனின் கட்டுரையும்

ஊர்ந்து போகும் தேரு



சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது.


’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய
எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம்,
Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப்
பரபரப்பூட்டினார்கள்.


கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக் கதையை நம்பி
யார் பணம் போட்டார்களோ என்று வேதனையாகவும் வெறுப்பாகவும் இருந்தது.


ஆனால், ’டைம்’க்காக இளையராஜா இசைத்த பாடல்களை, இன்றைக்கும் கேட்கச்
சலிப்பதில்லை, முக்கியமாக சுஜாதா பாடிய, ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’
என்ற பாட்டு.


ஆரம்பத்தில் ‘இத்தனை மெது(Slow)வாக ஒரு பாட்டா?’ என்று சலிப்பாகதான்
இருந்தது. ஆனால் இரண்டு முறை கேட்பதற்குள், அந்தப் பாடல் என்னை முழுமையாக
வசீகரித்துவிட்டது.


காதல்வயப்பட்ட பெண்ணின் உணர்வுகளை இயல்பாகச் சொல்லும் திரைப் பாடல்கள்
தமிழில் அதிகம் இல்லை, ஒன்று, கதாநாயகியைக் குறும்புப் பெண்ணாகச்
சித்திரித்து காடு, மேடெல்லாம் ஓட விட்டு, இயற்கையை ரசிக்கச் சொல்லி
அலைக்கழிப்பார்கள், இல்லாவிட்டால் அநியாயத்துக்கு வெட்கப்பட வைத்து,
கதாநாயகன் காலில் விழும்படியான வழிபாட்டுப் பாட்டுகளைப் பாடவைப்பார்கள்.


இந்தப் பாடல் அந்த இரண்டு வகைகளிலும் சேராமல் தனித்து நிற்கிறது.
மென்மையும், கம்பீரமும் கலந்த ஒரு காதலாக, ஆண்டாள் பாசுரத்துக்கு நவீன
வார்த்தைகள், இசை கொடுத்தாற்போல.


சுஜாதாவின் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு அழுகை
வருவதுபோலிருக்கும், ஆனால் அழமுடியாது, அதேசமயம் சிரிக்கவும் முடியாது,
மகிழ்ச்சிப்படவும் தோன்றாது. எளிமையான வரிகளை(பழநிபாரதி?)க் காயப்படுத்தாத
ராஜாவின் இசை ஓர் ஆனந்தத் தாலாட்டாக இருப்பினும், தூங்கக்கூட முடியாது,
பாடல் ஒலித்து முடிந்ததும், திரும்ப இன்னொருமுறை கேட்கவேண்டும் என்று
நினைப்பேன், ஆனால் ’மனசுமுழுக்க நிறைந்திருக்கிற இந்தக் கனம், அவஸ்தை
போதும், மறுபடி இதைக் கேட்காமல் விலகி ஓடிவிடவேண்டும்’ என்றும் தோன்றும்,
அப்படி ஓர் இனம் புரியாத இம்சைக்கு ஆளாக்கிவிடுகிற விநோதமான பாடல் இது.


’டைம்’க்குப்பிறகு, இளையராஜா நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டார்,
அதில் எத்தனையோ நல்ல, மிக நல்ல, அற்புதமான பாடல்களெல்லாம் வந்திருக்கின்றன,
ஆனால் ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’க்கு இணையான ஓர் உணர்வுபூர்வமான பாடல்
நான் இதுவரை கேட்கவில்லை.


இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இரண்டு நாள் முன்புவரை.


சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நந்தலாலா’ இசைத் தொகுப்பில், ‘மெல்ல
ஊர்ந்து ஊர்ந்து ஊருஎங்கும் தேரு போகுது’ என்று ஒரு பாடல். கிட்டத்தட்ட
‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ மெட்டுச் சாயலிலேயே அமைந்துள்ளது, சில
சமயங்களில் அதன் காப்பிதான் இது என்றுகூடத் தோன்றுகிறது.


வித்தியாசம் என்னவென்றால், இது காதல் பாட்டு இல்லை, குழந்தைப் பாட்டு.


பாடல் வரிகளும் சரி, மெட்டு, பின்னணி இசையும் சரி, நிஜமாகவே ஒரு தேர்
மெல்லமாக ஊர்ந்து செல்வதுபோலவும், அதன்பின்னே நாமும நான்கரை நிமிடங்கள்
பயணிப்பதுபோலவும் ஓர் உணர்வை உண்டாக்குகின்றன.


நந்தலாலாத் தேர் செல்லும் பாதை, சமதளமாக இல்லை, அவ்வப்போது ஏற்ற,
இறக்கங்கள் குறுக்கிடுகின்றன, அங்கெல்லாம் மெட்டும் இசையும் ஏறி,
இறங்குகிறது, சடன் ப்ரேக் போட்டு நிற்கிறது,  மறுபடியும் மெல்ல வேகம்
பிடித்து ஊர்ந்து செல்கிறது.


இந்த பாணிக்கு ஓர் உதாரணம் சொல்வதென்றால், ’அஞ்சலி’ படத்தில், ‘வேகம்
வேகம் போகும் போகும்’ என்கிற பாட்டு. அதைக் கேட்கும்போதே அதிரடி வேகத்தில்
செல்லும் ஒரு வாகனத்தில் நாம் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றும்.


இதேபோல் இன்னொரு பாட்டு, ‘ஓரம்போ, ஓரம்போ’, தாறுமாறாக வளைந்து செல்லும்
சைக்கிள் பயணத்தை இசையாகவும் மெட்டாகவும், பாடுகிற பாணியாகவும்
மொழிபெயர்த்திருப்பார் இளையராஜா.


’அஞ்சலி’யில் விண்வெளிப் பயணம், ‘ஓரம்போ’வில் சைக்கிள் பயணம்,
’நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஜாகிங் பயணம், ‘நந்தலாலா’வில் சுகமான தேர்ப்
பயணம்.


கடந்த இரண்டு தினங்களில் இந்தப் பாட்டைக் குறைந்தபட்சம் நூறு தடவையாவது
கேட்டுவிட்டேன், அசைந்து அசைந்து நடந்து வரும் ஒரு தேராக ஏராளமான குழந்தைப்
பருவ நினைவுகளைக் கிளறியபடி இந்தப் பாடல் மனத்தில் அழுந்தப்
பதிந்துவிட்டது. ஒவ்வொருமுறை பாடல் முடியும்போதும் ‘ஐயோ, தேரிலிருந்து
இறங்கவேண்டுமே!’ என்று வருத்தமாக இருக்கிறது.


’நந்தலாலா’வில் இந்தப் பாடல்மட்டுமில்லை, அநேகமாக எல்லாமே குழந்தைப் பாடல்கள்தான், ராஜா அடித்து ஆடியிருக்கிறார்.


’குழந்தைப் பாடல்’கள் என்றால், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’
ரகம் இல்லை, குழந்தைகளின் மன உணர்வுகளை இசையில், மெட்டில், ஒலிகளில்
வெளிப்படுத்துகிற நுணுக்கமான கலை இது. அரை டவுசர் பருவத்துக்கே மீண்டும்
நம்மைக் கூட்டிச் சென்றுவிடக்கூடியது.


அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்,
எளிமையான, உணர்வுபூர்வமான மெட்டுகளுக்கு, ஆடம்பரம் இல்லாத இசைச் சட்டை
போட்டு உட்காரவைத்திருக்கும் ராஜாவின் தந்திரத்தை நீங்களும் ரசிக்கலாம்.


ஒரே குறை, நம் மண்ணின் மெட்டுகளாகத் தோன்றுகிறவற்றுக்கு அதீதமான
மேற்கத்திய இசைக் கோர்ப்பு சேர்த்ததுதான்  கொஞ்சம் உறுத்துகிறது,
பலாச்சுளையை சீஸில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல.


***


சில பின்குறிப்புகள்:


1.  இயக்குனர் மிஷ்கின் ’நந்தலாலா’ பாடல்களில் சிலவற்றைமட்டுமே
படமாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனக்குத் தேவை இரண்டு பாடல்கள்தான்
என்று தெரிந்தும்கூட, ராஜாவை இன்னும் வேலை வாங்கி நிறைய நல்ல பாட்டுகளை
வாங்கியிருக்கிறார், அவருக்கு நன்றி!


2. ’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட இல்லை (நான் கவனித்தவரையில்).


3. தமிழ்த் திரைக் கலைஞர்களில், இளையராஜா அளவுக்குத் தனது கலைத்
திறமையின் சகல சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்துகிற / நிரூபிக்கிற
வாய்ப்புக் கிடைத்தவர்கள் அநேகமாக யாருமே இல்லை. ஓர் திரை இசையமைப்பாளராக
என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா,
பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய
சம்பாதித்துவிட்டார், அதன்பிறகும் தொடர்ந்து பாடல்களை
உருவாக்கிக்கொண்டிருக்க அவருக்கு எது ஊக்கம்? திரும்பத் திரும்ப அதே
சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?


அடுத்தபடியாக, ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது
பத்தோடு பதினொன்றுதான். உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத்
தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப்
பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.


இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்? தன்னுடைய சொந்த மகன்,
மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத்
துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர்
வருந்துவாரா? பிரபல்யம் என்பது தரத்துக்கான அளவுகோல் இல்லைதான். என்றாலும்,
தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது
வேதனையாக இருக்காதா? அதற்கும் இசைதான் அவருக்கு மருந்தா?


இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு
ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும்
வாய்ப்புக் கிடைக்கும்.


***


என். சொக்கன் …


17 01 2009


0 comments:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99