இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை வரியில் மதிப்பீடுகளை அள்ளித் தெளிக்கும் காலத்தில் இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாய் பெரும்பான்மையான விமர்சனங்கள் ட்விட்டர் பாணியிலேயே பதியப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட கட்டுரைகளும் தெளிவில்லாத சித்திரத்தை மட்டுமே நம்முன் வைக்கிறன. பல சங்கம (Fusion) இசைத் தொகுப்புகள், குறிப்பாகத் தமிழ் மையம் வெளியிட்ட Mozart meets India போன்ற தொகுப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த இத்தொகுப்புக்கு நடுநிலையான விமர்சனங்கள் உருவாகாத நிலை இன்றும் இருப்பது வேதனையானது. வெளியான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இருக்கும் சில முக்கியமான விமர்சனங்களையும், அவை முன்வைத்த கேள்விகளையும் மறுபரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
எல்லா நாட்டிலும் கலைஞர்கள் இயங்கும் துறைக்கு வெளியே அவர்களின் ஆளுமைகளை விமர்சிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைக்கு வெளியே நடக்கும் விவாதங்களுக்கு அதிகமாகத் தீனி போடுவதும் இவைதான். இப்படிப்பட்ட விமர்சனங்களை மீறியே ஒரு கலைஞன் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களும், அதன் வழியே எழும் விவாதங்களும் பெரும்பாலும் இந்த அளவிலேயே நின்றுவிடுகின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள், இளையராஜாவின் ஆளுமையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. இளையராஜாவின் இசைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. அவர் நிகழ்த்திய இசைச் சாதனைகளை ஒதுக்கிச் செல்லும் நிலை பரிதாபமானது. இணையத்தில், தனிப்பட்ட குழுக்கள் மட்டுமே இளையராஜாவின் இசை குறித்த விவாதங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் அவை எங்கும் பதியப்படாமல் காற்றில் கரைந்துவிடுகின்றன.
கிராமிய இசைப் பாணி, கர்நாடக சாஹித்தியங்கள், மேற்கத்திய செவ்வியல் முறைகள் மூன்றையும் சரியான கலவையில் இணைத்து இனிமையான பாடல்களாகக் கொடுத்தது இளையராஜா செய்த அபாரமான சாதனை. இசையின் சட்டகத்தினுள் இருந்த எண்ணிலடங்கா சாத்தியங்களை இவர் பாடல்கள் திறந்து காட்டின. பலர் இளையராஜாவின் திரையிசை மூலம், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை எதிர்ப்பாதையில் சென்றடைந்தது வேறெங்குமே நடக்காத மாற்று நிகழ்வுகளாகும். பல ராகங்களை திரைப்பாடல்களில் கையாண்ட இவரின் பாண்டித்தியத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட இசைப் பாணியை மட்டுமே திரையிசையில் நிகழ்த்த முடியும் என்ற கருத்தை மாற்றி, பின்ன்ணி இசையைத் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே ஆக்கிய சாத்னையும் இவரது.
திரையிசை வட்டத்தைத் தாண்டி 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ எப்படிப் பெயரிட ‘( How to Name it) என்ற இசைத் தொகுப்பை இளையராஜா வெளியிட்டார் (இதில் பிரதான வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். கடந்த வருடம் இவர் ராகசாகா என்ற சங்கம இசைத் தொகுப்பை வெளியிட்டார்). இன்று, திரைப்பட இசை வெளியிடுவது ஒரு பிரம்மாண்டச் சடங்காக மாறியுள்ளது. யூ ட்யூப் முதல் பல வலைத்தளங்களில் ஒளித்தொகுப்புகளாகவே இவை நமக்குக் கிடைக்கின்றன. 1986 ஆம் ஆண்டு ‘எப்படிப் பெயரிட’ இதே போல் ஒரு பொது அரங்கில் வெளியானது. ஆனால், இன்று அந்த வெளியீட்டு விழா பற்றி துணுக்குச் செய்திகள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன; ஒரு புரட்சிகரமான தொகுப்பாக இந்திய அளவில் அது கவனிக்கப்படவில்லை. ஒரு அகழ்வாராய்ச்சி போல் தேடினால் மட்டுமே சிதிலங்களாய் ஒரு சில விவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையான பார்வையை கொடுப்பதில்லை.
அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. (முழுக் கட்டுரையை கடைசியில் இணைத்திருக்கிறேன்.) இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.
மேற்கிசை உலகில் நடந்த ஒரு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம் – May 29, 1913 ஆம் ஆண்டு ‘The Rite of Spring’ எனும் நடன-இசை பாரீஸில் கூச்சல், அடிதடிக்கிடையே அரங்கேற்றம் ஆனது. இன்றும்,அது உருவாக்கிய அதிர்வலைகளை ஆச்சர்யத்துடன் இசைக் கலைஞர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த இசை இருபதாம் நூற்றாண்டை வரவேற்ற நவீன மேற்கிசைப் பாணியாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி பற்றி பலவிதமான ‘கதை’களும் உருவானது. பார்வையாளர்கள் மத்தியில் ஹிட்லரும் இருந்தார் என்பது அதில் புகழ் பெற்றக் கதை. இப்படியாக, ஒரு நிகழ்வைத் தொகுப்பதோடு மட்டுமல்லாமல் (வெளியான தேதி, நேரம் உட்பட), விழாவில் கலந்துகொண்டவர்கள், இசை நுட்பங்கள், அதன் கதைகள், கட்டுக்கதைகள் எனத் தொகுக்கும் வழக்கம் மேற்கிசை உலகில் உள்ளது.
The Rite of Spring இசையில் உள்ளது போன்ற ஆழமான இசை நுட்பங்கள் இளையராஜாவின் எப்படிப் பெயரிட’ இசைத்தொகுப்பிலும் உண்டு. அதேபோல், இத்தொகுப்பில் கறாரான கர்நாடக மரபுகளுக்கு உட்பட்டவை தவிர மரபை மீறிய இசையும் உள்ளது. `
சுஜாதா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாத கணையாழியின் கடைசி பக்கத்தில் – `இளையராஜாவின் How to Name it ,It is Only Wind (Nothing But Wind தொகுப்பை இப்படிக் குறிப்பிடுகிறார்) போன்ற வினோதப் பெயர்களுடன் ஸிம்பொனியையும் சிம்மேந்திரமத்திமத்தையும் ஒட்ட வைக்க பெரும்பாடு பட்டாலும் கேட்கும்போது திட்டு திட்டாகத்தான் இருக்கிறது. சங்கராபரணம் ஒரு மேஜர் ஸ்கேல் என்றும் கீரவராளியோ ஏதோ மைனர் ஸ்கேலுக்கு சமானும் என்றும் ப்ரொபஸர் ராமநாதன் சொல்லியிருக்கிறார். இருந்தும் இரண்டையும் இணைக்கும் முயற்சிகள் வெள்ளைக்காரிக்கு தலைபின்னி பூ வைத்தாற் போகத்தான் அசம்பாவிதமான இருக்கின்றன. காரணம் , இரண்டும் அமைப்பில் அஸ்திவாரத்தில் வேறுபட்டவை. மேஜர், மைனர் என்பது ராகங்கள் அல்ல. அவை ஸ்வரங்களுக்கு இடையே ஆன ஒருவித பிணைப்பு, அல்லது உறவுமுறை` என இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுக்கும் விதமான விமர்சனத்தை முன்வைத்தார். இப்படிபட்ட தன் வயப்பட்ட கருத்துகள் இத்தொகுப்பின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறியது.
இத்தொகுப்பை ரசிக்க சங்கம (Fusion) இசையின் இலக்கணத்தை புரிந்து கொள்வது அவசியம். சங்கம இசைக்கென்று இலக்கணம் எதுவும் இல்லையென்றாலும் அதில் வாத்தியங்களும், ஒலியமைப்பும் கையாளப்படுவதைப் பொறுத்து இரண்டு அமைப்புகளைக் கொண்ட இலக்கணத்தை உருவகிக்கலாம்.
இரண்டு வகையான சங்கம இசைப் பாணிகள் உள்ளன. முதல் பாணியில் – ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத பல ஒலித் துண்டுகள், ஒரே நேரத்தில் இணக்கமாக, இனிமையாக ஒலிக்கும். இது பண்யிணைப் புள்ளி (Counterpoint) பாணியாகும். இது பிரபலமான பலத் தொகுப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஒலிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இது செங்குத்தான (Vertical) இசை வடிவம் என்றாகிறது.
அடுத்த பாணியில் – வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கும் வெவ்வேறு இசை வடிவங்கள். ஒரு ஒலித் துண்டு குறிப்பிட்ட நேரம் ஒலிக்கும். இதைத் தொடர்ந்து மற்றொரு ஒலி ஒலிக்கும். இப்படி அடுத்தடுத்து தொடர்சியாக வருவதால், இது கிடைநிலை (Horizontal) வடிவம் என்றாகிறது.
இந்த இரு இசைப் பாணியையும் பயன்படுத்தி, மேற்கத்திய இசையில் பல வடிவங்கள் உள்ளன. சொனாட்டா (Sonata), கான்சர்ட்டோ (Concerto), சிம்பொனி (Symphony), காண்டாடா(Cantata), ஃபூக் (Fugue) போன்ற வடிவங்களில் இவ்விரு வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல பிரிவுகள் கொண்டவை. இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி,இனிமையான இசையை கொடுப்பது இவற்றின் பொது அம்சமாகும்.
இளையராஜாவின் இசையின் வேர் ஜான் செபாஸ்டியன் பாக்கின் (Johann Sebastian Bach) இசை பாணியிலிருந்து உருவானது. இவர் திரைப்படங்களிலும் பாக்கின் பாணியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். ஃபூக் அமைப்பில் மேற்கிசையில் முத்திரை பதித்தவர் பாக். முப்பத்துக்கும் மேலான உள்ளமைப்புகளை உடைய ஃபூக், அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டது. சில ஃபூக் அமைப்புகள் மூன்றுக்கு மேற்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கும். முதல் பகுதியும், கடைசி பகுதியும் ஒரே வகையான ஒலிகளைக் கொண்டிருக்கும்(அவை வேகத்தில் மாறுபடலாம்) . நடுப்பகுதியில் மட்டும் சில மாற்றங்களுடன் ஒலித்து, முதல் பகுதி இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி, அவை ஒலிக்கவேண்டிய வரிசையில் ஒன்றாகக் கோர்ப்பது இசை ஒருங்கிணைப்பாளரின் (Conductor) மிகப்பெரிய சவாலாகும்.
இந்த வடிவத்தை இளையராஜா பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களிலும், பின்ணனி இசையிலும், ஃபூக்கின் பல சாத்தியங்களாக நுழைத்துள்ளார். பண்யினைப் புள்ளி உத்தியை கச்சிதமாக பயன்படுத்தும் இசை பாணியாக ஃபூக் இருப்பதால், பல இசைக் கருவிகளின் சங்கமமும் இங்கு சாத்தியமாகிறது.
திரைப்படத்தின் பின்ணனியில் இருவித வயலின் இசை ஒன்றாகச் சேர்வதும் நடுவே ஒரு இனிமையான குழலோசை ஒலிப்பதும் பண்யினைப் புள்ளியில் சேர்வதால் இனிமையான இசையாகிறது. இவை மட்டும் போதாது. சரியான தொனியில், தேவையான கால அளவில் ஒலித்தால் மட்டுமே இது இனிமையான இசையாகும். இல்லையென்றால் வெவ்வேறு இசையாக தனித்தனியாக ஒலித்து, இனிமையற்றதாக மாறிவிடும்.
‘How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலகஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.
உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில் I met Bach in my house மற்றும் ..and we had a talk பாடல்களில் எந்த புதுமையும் இல்லை, ஏதோ ஒரு இந்திப் பாடலை நினைவூட்டுகிறது என்ற ஒற்றை வரியில் இப்பாடல்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், உண்மையில் பாக் வழியை பின்பற்றி அமைந்த முத்திரை பாடல்களாக ‘I met Bach in my house’ மற்றும் ‘..and we had a talk’அமைந்திருக்கிறது. இவை இளையராஜாவின் இசையில் வெளிபட்ட பாக்கின் தாக்கத்தை திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது. சங்கம இசையின் கருத்தை தெளிவாக உணர்த்தும் இப்பாடல்கள், இவ்விரு இசை மேதைகளின் ராக அலங்காரங்களை அருகருகே நம் கண் முன் நிறுத்துகிறது.நம்மை சந்திக்க வரும் விருந்தாளிகளுக்கு நம் முறைப்படி வரவேற்பு கொடுப்பது வழக்கம். நம் விருந்தாளிக்கு புரியும் மொழியில் பேசினால் மட்டுமே கருத்து பரிவர்த்தனை நடக்கும். இதை மனதில் கொண்டு, இளையராஜா கர்நாடக ராக பாணியில் பாக்கின் புகழ் பெற்ற வயலின் இசை வடிவமான Goldberg variations மற்றும் Bourre in E minor இரண்டையும் நிகழ்த்திக்காட்டுகிறார். `நம் இசை வடிவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கேளுங்கள்` – என பாக்கை நோக்கி இளையராஜா சொல்வது போல் இந்தப் பாடல் இருக்கிறது.
தொடர்ந்து இக்கட்டுரை இதே போன்ற தட்டையான பார்வையை முன்வைக்கிறது. இதன் உச்சகட்டமாக, Is it Fixed, The Study of Violin, You Cannot be free என்ற பாடல்களில் எந்த புதுமையும் இல்லை , இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களை நினைவூட்டுகிறது என்று சில வார்த்தைகளில் இப்பாடல்களில் நுட்பம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா? இப்பாடல்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது?
இப்பாடல்கள் மூலம் இளையராஜா உருவாக்க விரும்பும் உணர்வுகள் மிக நுட்பமானவை. இம்மூன்று பாடல்களும் உருவாக்கும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமானவை. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனாலும்,இந்த மூன்று பாடல்களும் மரபான இந்திய மற்றும் மேற்கிசை வடிவங்களிலிருந்து விலகி உள்ளன. குறிப்பாக, நேர அளவுகள்(தாளங்கள்) மிகச் சுதந்திரமாக கையாளப்பட்டிருக்கின்றன. இச்சுதந்திரம், ஜாஸ் பாணியில் வழுக்கிச் செல்லும் ஒலிகளை உருவாக்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் கறாரான இலக்கணத்தை மீறும் முயற்சிகளைச் செய்திருப்பது , புரட்சிகர இசையாக இன்றும் இதை நிலைநிறுத்துகிறது. பாடல்களின் பெயர்கள் இசையமைப்பாளரின் எண்ணத்தையும், மரபு மீறிய முயற்சியயும் பிரதிபலிக்கவே செய்கிறது.ஒரு குறிப்பிட்ட மேற்கிசை வடிவத்தில் இந்த மூன்றும் பொருந்துவதில்லை. சோதனைப் பகுதிகளாக ஒலிக்கும் இவை சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. ஆனாலும், இவை அடிப்படையில் கர்நாடக ராகங்களை மையமாகக்கொண்டு அமைந்த பாடல்கள். அம்மரபுகளை மீறுவதில் உள்ள முனைப்பு பாடலின் அமைப்பிலும் அதன் பெயரிலும் தெரிகிறது.
மேலும், கோட்பாட்டு ரீதியில் இவை இசையின் இரு நிலைகளை உணர்த்துகிறதாகத் தோன்றுகிறது. கர்நாடக சங்கீதத்திலுள்ள கறாரான இலக்கணங்களுக்கிடையே நிலவும் சுதந்திரம் இம்மூன்று பாடல்களிலும் வெளிப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தின் கட்டமைப்பில், மேற்கிசை வடிவங்கள் இணைவதன் மூலம் இச்சுதந்திரத்தின் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
இப்படிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு – இதைப் போன்ற இசையை அவர் திரைப்படப்பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் ஏற்கனவே நிகழ்த்திக்காட்டியுள்ளார். அதனால் பல பாடல்களையும் சிறு துண்டுகளாக இணைக்கும் உணர்வே ஏற்படுகிறது – என்பதாகும். இந்திய இசை வரலாற்றில் இதற்கான பதில் உள்ளது.
கர்நாடக இசை தோன்றிய காலத்திலிருந்து , இந்த டிசம்பர் சீசன் வரை பாடப்படும் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அடிப்படையில் இந்தப் பாடல்களை பாடகர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுவர். இதை Rendition – நிகழ்த்துதல், பாடும் பாணி என சுதந்திரமாக தமிழாக்கலாம். திரையிசையில் இளையராஜா உபயோகித்த ராக வெளிப்பாடுகள் இத்தகைய தனி பாணியாகும். ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை உபயோகித்து இனிமையான பல பாடல்களை உருவாக்கியுள்ளார். பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளை உபயோகித்து, உறுத்தாத பல இசைத் துண்டுகளை திரைக்கதைக்கேற்ப பிண்ணனியில் இசைத்துள்ளார். குறிப்பாக, கிராமிய இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை சரியான கலவையில் தன் முதல் படத்திலிருந்து உருவாக்கி வருகிறார். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் இம்முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றன.
இத்தொகுப்பின் மையக்கருத்தை அடிப்படையாக்கொண்டு மூன்று பாடல்கள் உள்ளன. இவை இத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மூன்று பகுதிகளைக் கொண்ட `எப்படிப் பெயரிட` பாடல் ஃபூக் அமைப்பைக் கொண்டது. தெளிவான சிம்மமேந்திர மத்யமம் ராகத்தில் தொடங்கி, சண்முகப்பிரியாவில் கலக்கும் முதல் பகுதி, நடுப் பகுதியில் உள்ள வீணை, வயலின் அமைப்புக்கு அழைத்து செல்கிறது. இரண்டாவது வயலின் ஸ்வரங்களுக்கிடையே குதித்து மேற்கிசை பாணியில் ராகங்களுடன் இணைகிறது.
இத்தொகுப்பிளுள்ள இசையை கேள்வி-பதில் பாணியில் புரிந்துகொள்ளலாம்.சில ஒலிகள் கேள்விகளாய் முன் வைக்கும் இடத்திலிருந்து வரும் புதிய ஒலி பதிலாக மாறுகிறது. இது இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தப் பாடலில் முதன்மை வயலினும், இரண்டாவது வயலினும் கேள்வி கேட்பது போல் உயரச் சென்று ஸ்வரங்களை நிறுத்துகிறது. இந்நிலையில் ஸ்வரங்கள் உருவாக்கு இசை முடிச்சுக்களை உணரலாம். பின்னர் பதில் சொல்லும் வகையில் அடுத்த பகுதி இம்முடிச்சை விலக்குகிறது.
அடுத்தப் பாடலான `Mad Mad Fugue’ சுத்தமான ஃபூக் அமைப்பாகும். இத்தொகுப்பிலுள்ள மற்ற பாடல்களை விட இப்பாடல் தெளிவான கட்டமைப்பைக் கொண்டது. திட்டவட்டமான செவ்வியல் தன்மையான ஃபூக் அமைப்பில், நிகழ்கால வாத்தியக்கருவியான டிரம்ஸ் இணைகிறது. இப்படிப்பட்ட இசைக்கோர்வையின் நிர்வகிப்பு ஒருங்கிணைப்பாளரின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. ஸ்வர வரிசையின் (ஸ்வரமாலையின் (Chromatic) ) தேர்வு பிரம்மாண்டமான வடிவமைப்பாக உருவாகிறது. குறிப்பாக, கடைசி ஒரு நிமிடத்தில், வயலினும் டிரம்ஸும் செய்யும் சாகசங்கள், திரைப்பட உச்சகட்ட காட்சி போல வேகமாகச் செல்கிறது. மிகக் கட்டுக்கோப்பான ஃபூக் வடிவத்தில் மின்னல் வேகத்தில் நுழையும் இந்தப் பகுதி, பாடலின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது.
Chamber Welcomes Thyagaraja பாடல் ஒவ்வொரு இசைக்கருவியும் கல்யாணி ராகத்தை விரிவாக கையாள்கிறது. இரண்டாவது பகுதியில் இணையும் மேற்கிசை ஒலிகள், ஒற்றை வயலினுடன் சேர்ந்து கம்பீரமான இசை வடிவமாக மாறுகிறது. தியாகப்பிரம்மம் இப்படியொரு குழு இசை நடக்கும் அரங்கில் நுழைந்தால், அவரை வரவேற்க ஒலிக்கப்படும் வரவேற்பு இசை போல் கம்பீரமாய் முடிகிறது.
இத்தொகுப்பு இளையராஜாவின் இசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளுக்காக படைக்கப்பட்ட விருந்தாகும். தன் இசையின் வேர் இவர்களிடம் தொடங்குவதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மேலும், சம்பிரதாயமான இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் விலக இளையராஜா எடுத்த முக்கியமான முயற்சி. இதில் பல தொழில்நுட்ப புதுமைகளையும் அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஷெனாய், பசூன் (Bassoon) போன்ற புதுவித குழற்கருவிகளை உபயோகித்துள்ளார். எந்த புது பாணியும் காற்றிலிருந்து தோன்றுவதில்லை.
கலைஞனுக்குள் எழும் கேள்விகளே கலையாய் வெளிப்படுகின்றது. இளையராஜா எடுத்துக்கொண்டிருக்கும் கரு, முதல் திரைப்படத்திலிருந்து அவருடன் இருந்தவை – குறிப்பாக சங்கம இசை முன்வைக்கும் சவால். இரு இசை வடிவங்களின் சங்கமத்தை, முதல் திரைப்படத்திலிருந்து கையாண்டு வந்தாலும், இத்தொகுப்பு பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இதில் முன்வைத்திருக்கும் சவால் இன்றும் இளையராஜாவைத் தொடர்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக, You cannot be free, Is it fixed போன்ற பாடல்கள் உருவாக்கிய புதிய இசை பாதைகள், பாக்கின் Goldberg variations போல் இன்றளவும் யாரும் தாண்டிச்செல்ல இயலாத முயற்சியாய் இருப்பதே இத்தொகுப்பின் வெற்றி.
அசோகமித்திரன் கட்டுரையிலிருந்து…
“இந்த ஊரில் உள்ள சங்கீத வித்வான்கள் அனைவருக்கும்தான் நான் அழைப்பு அனுப்பியிருந்தேன்” என்று இளையராஜா கூறினார். ஆனால், அவருடைய புதிய படைப்பான `எப்படிப் பெயரிட` இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் அநேகமாக எல்லாருமே சினிமாத் துறையினர்தான். டி.வி.கோபால கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. ஆனால், கோபால கிருஷ்ணனையே பாதி சினிமாக்காரர் என்று நினைப்பவர்களுண்டு.
சங்கீதத் துறையினர் வரவில்லை என்றாலும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, இளையரஜாவின் மேற்கு-கிழக்கு இசை இணைப்பு முயற்சிகள் ரசமானவை; பல ஆண்டுகள் முன்பு அவரே எண்ணியிருந்த முயற்சிகள் என்றார். பழுத்த அனுபவம் மிகுந்த பியானோ நிபுணரான ஹாண்டல், இளையராஜாவிடம் அழைத்துச் சென்ற மேல்நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் இளையராஜாவின் கிரகிப்பு ஆற்றலையும், திரைப்படக் காட்சிக்கு ஏற்றபடி நொடிப்பொழுதில் இசை அமைத்து அதை வாத்திய கோஷ்டிக்குத் தெரிவித்து ஒலிப்பதிவு செய்யும் திறமையையும் கண்டு வியந்திருக்கிறார்கள் என்றார். `எப்படிப் பெயரிட` இசை மாஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்திய விழாவுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும் என்றார். நாற்பதாண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பெருமதிப்புக்குரியவராக இருந்து வரும் நெளஷாத் அவர்கள் இளையராஜாவிடம் கற்க நிறைய இருக்கிறது என்றார். இவை எல்லாம் சாதாரணமாகக் கிடைக்ககூடிய பாராட்டுகள் அல்ல.
வெறும் டியூன்கள் என்று பிரித்துப் பார்த்தோமானால் `எப்படிப் பெயரிட` இளையராஜாவின் பல முக்கிய திரைப்படங்களின் சிறப்பான இடங்களை நினைவுபடுத்தும். ஆனால் இந்தப் படைப்பின் சிறப்பம்சம் வாத்திய கோஷ்டி நிர்வகிப்பு; திரு.வி.எஸ். நரசிம்மனின் பிரதான வயலின்; சுவரூபத்தைக் கலைக்காதபடி இந்திய ராகங்களுக்கு மேலைய இசை வடிவம் தருதல். இத்திசையில் முயற்சிகள் இதுவரை செய்யப்படவே இல்லை என்று கூற முடியாது. ஐந்தாறு மாதங்கள் முன்பு ஒரு போர்ச்க்கீசிய இசைக்குழுவுடன் சென்னை வந்த வயலின் நிபுணர் எல்.சுப்பிரமணியன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய முயற்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.
`சங்கீதக் கனவுகள்` என்ற நூலின் ஒவ்வொரு எழுத்தும் இளையராஜாவால் எழுதப்படாமல் இருக்கலாம். இளையராஜா எழுத்தாளரல்ல. ஆனால் நூலில் கூறப்பட்டிருக்கும் அனுபவங்கள், சிந்தனைகள், உணர்வுகள் அவருடையதே என்பதைச் சந்தேகிக்க இடமில்லை. உண்மையில் இம்மாதிரி நூல்களில் இவைதான் முக்கியம். ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த இசை மேதைகளின் இல்லங்கள் ஷேத்திரங்களாகப் பராமரிக்கப்பட்டு வரும் விசுவாசத்தைக் கண்டு மனமுருகி, `நமது நாட்டில் தியாகப்பிரும்மம் வாழ்ந்த வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது…என்னைக் கேட்டால் தியாகையருக்குக் கோயிலையே கட்டிவிடுவேன்…நான் கேட்டால் `நீ சினிமாக்காரன்` என்பார்கள்.` என்று ஓரிடத்தில் இளையராஜா எழுதியிருக்கிறார். இப்படி அந்த நூலில் பல பொறிகள். இவ்வளவு உலக நடப்புப் பரிச்சயம் கொண்ட இளையராஜாவுக்கு அவருடைய விழாவுக்கு சங்கீதப் பிரமுகர்கள் வராதது வியப்பைத் தந்திருக்காது.
நன்றி – ரா.கிரிதரன் (சொல்வனம் – இணைய மாத இதழில் வெளியானது) பலரை சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் இந்த மறு பதிப்பு
2 comments:
இசையின் இத்தனை நுணுக்கங்களை சொல்ல இயலாத காலகட்டத்தில் இளைய ராஜாவின் புதுமை இசைக்காக கணினி காலத்திற்கு அப்பாற்பட்ட இசை.
சிம்பனியின் ரகசியங்கள் இன்னும் வெளிப்படவேயில்லை.அதுபற்றியும் பதிந்து வைப்பது அவசியம்.நன்றி.
மிக சரியான வார்த்தைகள் ராஜ நடராஜன் அவர்களே
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.