இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

சனி, 5 ஜூன், 2010

யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா=தட்ஸ் தமிழ் செய்தி

சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.

எஸ்.ராமகிருஷ்ணனை பாட்டெழுத வைத்த இசைஞானி!=தட்ஸ்தமிழ் செய்தி

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பாடலாசிரியராகிறார்... படித்துறை என்ற படத்தின் மூலம்.

முழுக்க முழுக்க திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் எடுக்கப்படும் படம் படித்துறை. பாலுமகேந்திராவின் சீடரான சுகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், இசைஞானி இளையராஜா இசை தர ஒப்புக் கொண்டாராம்.

படத்தில் பாடலாசிரியர்களாக இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார் ராஜா. அவர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணன். இருவருமே ஆரம்பத்தில் பாடல் எழுத சற்றுத் தயங்க, இளையராஜாதான் அவர்களை உற்சாகப்படுத்தி பாட்டெழுத வைத்துள்ளார்.

"என் படத்துக்கு இளையராஜாதான் இசை என்பதில் இன்று நேற்றல்ல... பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். நானும் இசையைப் படித்தவன். ராஜாவின் இசைக்கு என்னைக் கொடுத்தவன். படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுமே முத்திரை பதிக்கும்..." என்கிறார் இயக்குநர் சுகா.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர் நடிகர் ஆர்யா. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லையாம்!

பாரதிராஜா தலைமையில் இன்று 'நத்திங் பட் விண்ட்'-தட்ஸ் தமிழ் செய்தி

இயக்குநர் பாரதிராஜாவின் தலைமையில், இளையராஜா பங்கேற்கும் நத்திங் பட் விண்ட் இசைவிழா இன்று சனிக்கிழமை மாலை நடக்கிறது.

சென்னை சங்கீத நாடக சபையில் (மியூசிக் அகாடமி) மாலை 7 மணிக்குத் துவங்கும் இந்த விழாவுக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை வகிக்கிறார். கவிஞர் வாலி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் 67 வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரைக் கவுரவிக்க, அவரது மகள் பவதாரிணி நடத்தும் இசை நிகழ்ச்சி இது. மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகர்கள் பாடுகிறார்கள்.

இரவு 9 மணி வரை நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு நத்திங் பட் விண்ட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயரில் 25 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா உருவாக்கிய இசை ஆல்பம் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது. பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸியா இதில் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தார். சர்வதேச அளவில் மிகப் பிரபலமான இசை ஆல்பங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற சில இசைக் கோர்வைகளையும் விழாவில் தரப் போகிறார்களாம்.
=====000=====

செவ்வாய், 1 ஜூன், 2010

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

"எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"

இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ராஜா சார். மென் மேலும் உங்கள் இசைப்பணியும்,இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.
”எனக்கு மிகவும் பிடித்த நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல்”





நம்ம தல கானாபிரபா அமர்க்களமான பிறந்தநாள் மலரே போட்டிருக்கிறார்.அதை மிஸ் பண்ணாதீங்க.
==============
இசைஞானியின் பிறந்தநாள் செய்தி தட்ஸ் தமிழில் இருந்து அப்படியே

இசை எல்லாருக்கும் சொந்தமானது. யாரும் அதற்கு வாரிசாக முடியாது, என்றார் இசைஞானி இளையராஜா.

ஜூன் 2ம் தேதியான நேற்று தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் அவர் பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி, திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடம் அமைந்துள்ள பிரசாத் ஸ்டுடியோவில் குவிந்தனர்.

பிறந்த நாள் விழாவை ஃபெப்ஸி அமைப்பும், ஜி சிவாவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன், ஃபெப்ஸி ஜி சிவா, நடிகர்-ஒளிப்பதிவாளர் நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்று, இளையராஜாவை வாழ்த்தினர்.
பின்னர் மூன்று ஆசிரமங்களைச் சேர்ந்த 1000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார் இளையராஜா.

ஃபெப்ஸி சார்பில் கொண்டுவரப்பட்ட கேக்கை வெட்டியவர், ராம நாராயணன், விசி குகநாதன் உள்ளிட்டோருக்கு ஊட்டினார்.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா சார்பில் கேக் வரவழைக்கப்பட்டது. அதையும் வெட்டிய ராஜா, அனைவருக்கும் பரிமாறச் சொன்னார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.

அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறையும் பிறந்த நாள் விழா வேண்டாம் என்றேன். ஆனால் இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்ற உங்களின் அன்புக்காக இந்த முறை கொண்டாடுகிறேன்.

என்னிடம் எந்த பிறந்த நாள் செய்தியும் கிடையாது. இந்த நாளில், ஏராளமான குழந்தைகளுக்கு உணவு வழங்கியது மிகுந்த நிறைவாக உள்ளது…” என்றார்.

பின்னர் அவரிடம், “உங்கள் இசை வாரிசு யார்?” என்று கேட்டனர்.

சற்றும் யோசிக்காத ராஜா, 'நீங்கள்தான்' என்றார். பின்னர், “இந்த உலகம் ரொம்பப் பெரிசு. இதில் அனைவருக்குமே சம பங்குண்டு. இங்கே உரிமை கொண்டாட என்ன இருக்கிறது. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை. இசைக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. அவரவர் திறமையில் முன்னே வர வேண்டியதுதான்” என்றார்.

பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பல பாடகர்கள், கவிஞர்கள் ராஜாவுக்கு வாழ்த்துக் கூறிச் சென்றவண்ணமிருந்தனர்.

ராஜா பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் டிவி:

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. ஆனால் விஜயகாந்தின் கேப்டன் டிவி மட்டும் காலை முதல் மாலை வரை இளையராஜா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் அருமையான பாடல்களையும் தொடர்ந்து ஒளிபரப்பியது.

மு.மேத்தா, கார்த்திக் ராஜா, பாடகர்கள் திப்பு ஹரிணி பேட்டிகள், ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவரது பேட்டி என தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.
Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99