இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்
இளையராஜா (ஆங்கிலம்: Ilaiyaraajaa) (பி. ஜூன் 2, 1943; இயற்பெயர்: ராசய்யா), இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

சனி, 5 ஜூன், 2010

யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா=தட்ஸ் தமிழ் செய்தி

சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.

1 comments:

நெய்வேலி பாரதிக்குமார் சொன்னது…

உங்கள் பெயர் கீதப்பிரியன் என்று இருக்கும்போதே நினைத்தேன் நீங்கள் இசைப்பிரியராக இருப்பீர்கள் என்று ... நீங்களும் என்னைப்போலவே இளையராஜா பிரியராக இருப்பதில் இணையற்ற மகிழ்ச்சி. இளையராஜா பற்றிய தகவல்கள் அருமையான தேவையான பதிவு. அந்த மனிதர் இப்படியெல்லாம் தனக்கு ஒரு பதிவு இருக்க வேண்டும் என்று முயற்சிக்க மாட்டார். அவர் இசை சாகசத்துக்கு அற்புதமான நன்றிக்கடன் இது. வாழ்த்துகள் சார்

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin
Phonetic
Tamil Typewritter
Tamil 99